Thursday, January 17, 2008

கோடரிகள்

கண்ணுக்குப் படாத
மனித நடமாட்டம்

கோடரிகளுடன்
காட்டினுள்
வெவ்வேறு முனைகளிலிருந்து
நுழைந்திருக்க வேண்டும்

திசையெங்கும்
பாய்ந்து சுழலும்
கோடரிகள்.
சரியும் மரங்களைச் சுற்றிக்
கசியும் பரிவு
(அளவான ஈரத்துடன்)

இலைகளும்
கதைகளும்
கூச்சலிட்டன

குறுக்கு நெடுக்காகக்
காடு முழுதும்
ஒலிகளின் குருட்டுப் பாய்ச்சல்.
பூமிக் கடியிலான மொழி
முறிந்தது போலும்

வழக்கமாக
ரத்த வாடையைக் கொண்டுவரும்
அதே காற்று
வந்து விட்டது

விடிவதற்கு இன்னும்
நேரமிருக்கிறது

மைதானம்

சிடுசிடுப்போடு
பார்த்துக்கொண்டிருக்கிறது
மைதானம்

வெயிலின்
திருகல் ஒலி
எங்கும் கேட்கிறது

கம்பிமுள் வேலியில்
அப்பாவித்தனம் படர்ந்து
ஓரிரு பச்சைக் கொடிகள்

ஓரமாய்
வரி நிழல் உறுத்தும் சாலை.
வகைவகைப் பாதச் சுவடுகள்
பல அடுக்குகளாக
0-0

மைதானம்
சலிப்போடு
புரண்டுகொடுக்கிறது
இருளின் ஊடாக வந்தடையும்
எல்லா முகங்களிலும்
ஒரேமுகம் உணர்ந்து.

எழுந்து அமர்ந்து
தனிமையின் ஒரேமுகம் தடவி
காலங்களைத்
துளைத்துப் போகும் ஒரு
பெருமூச்சை அயிர்த்துப்
படுத்துக் கொள்கிறது
0-0

பாதச் சுவடுகள் வதங்க
நீளமாய்ப் போன சாலை
இரவைப் பார்க்கத்
திரும்பி வரவில்லை

புழுங்கி வேகும் இரவு
மைதானத்தின் மூலையில்
ஒரு கழுவில் மாட்டி நெளிகிறது

அவன்

இது ஒரு திருப்பம்
திடீரென அவன்
எனக்குத் தெரிந்தவனாகினான்

மணல்தடத்தில் மாட்டுவண்டிகள்
எழுப்பிய ஓசையிலிருந்து
தோன்றினான்

சிந்தனையின்
சமவெளிப் பிரதேசங்களை விட்டு
வெகுதூரம் பிரிந்து வந்திருந்தேன்

நான் ஒன்றும் பிரயாணம் செய்பவனல்ல
எனினும்
என் இடம் ஒன்றல்ல
என்னைச் சூழும் பிரதேசங்கள்
மாறிமாறி வேறுவேறாகும் விநோதம்

விநோதம் பிளந்த ஒரு வினாடியிலிருந்து
அவன் வெளிப்பட்டான்

குறுகலான சந்துகளில்
எனக்குக் கிடைத்த என் சொந்த உருவம்
அவனப் பார்த்தபோது மங்கிப் போனதைப்
பின்னர்த் தட்டுப்பட்ட அனுபவமாக உணர்ந்தேன்

வாழ்வின் அணுக்களிடையே சீறும்
தனிமையின் விஷம்
எனக்குப் பழக்கமாகிவிட்டிருந்தது

இல்லாமையிலிருந்து
தோற்றங்கள்
எனக்கு வரத்தொடங்கியிருந்தன

வார்த்தைகள் வழங்குவதையெல்லாம்
மறுத்துக்கொண்டே கடந்து
கடைசியில்
எந்தச் சுரங்கத்திலும் நுழையாமல்
இருந்த இடத்தில்
திரும்பவே நேர்ந்தது
வார்த்தைகள் இப்போது
கற்படிவங்களாய்க் கிடந்தன

கற்படிவங்களின் வெற்றியை நகைத்து
அவன் தோன்றினான்

லயம்

உறங்கப் போகும் போது
எப்போதும்
ஒரு தாள லயத்தைக்
கடந்து போக நேரிடும்

பாறைகள் குதித்துக்கொண்டிருப்பது போல்
ஆரம்பித்து
நீருக்குள் கூழாங்கற்கள் உருள்வதுபோல்
அது முடிவடையும்

இப்போது தாளலயம்
ஓசைவரம்பு தாண்டி
விரிந்து பரவிக்கொள்ளும்
தொட அனுமதிக்காது --
மூச்சுக் காற்றைக்கூட வழுக்கிவிடும்

கவனிப்புக்கு உட்படும் நிலையிலேயே
வேறோருபுறம்
சூட்சுமமாய்க் கலகம் செய்யும்
0-0
உறங்கிப்போன பின்பு
மறுபடி ஓசை உருக்கள் வெளிப்படும்
காலத்தைக் கணுக்கணுவாகத் தறிக்கும்
காலம் -- ஓசை -- காலம் -- ஓசை எனத்
தொடுத்துக்கொள்ளும்

தாளலயம் மீண்டும்
நீருக்கடியில்
கூழாங்கல் உருளும் ஓசையைப்
பெற்றுவிடும்.

இப்போது மிக நெருங்கிக் கேட்கும்.
கலகமற்ற சூட்சுமமாய்
என்மீது தடதடக்கும்

ஏனெனில்
நீர்ப்பரப்பு இப்போது
என்மீது ஓடிக்கொண்டிருக்கும்

சாயல்

ஒரு நாள் ஒரு சாயலைப் பார்த்தேன்

நீண்டு கிடந்த சாலையில்
நெடுநேரம் நின்றுகொண்டிருந்தது

வடிவ ஒழுங்குக்குட்பட்ட வருத்தத்துடனும்
கைகளில் இறுகப் பிடித்த மகிழ்ச்சியுடனும்
எதிரெதிராக விரைந்துகொண்டிருந்த
மனிதக் கூட்டத்தைப்
பார்த்துக் கொண்டிருந்தது

தனது அலைகளை ஏவி
அனைவரையும் நனைத்தது
எவரும் கண்டுகொள்ளவில்லை

தன் ஒருமையிலிருந்து விடுபட்டது
சிதறல் அன்று என்று
சொல்லிக்கொண்டது

தன் நிலையில் நிற்க முடியாத போது
சிறிது நேரம்
மங்கி மறைந்துபோய்
மறுபடி தோன்றியது

தன்னை உறுத்துப் பார்த்துச்
சந்தேகத்துடன் நகரும் குழந்தைகளைப்
புன்னகைத்தது

ஊர்ந்து பரவி
நாலா திசையும் கடந்தது

கடலோரங்களில்
மலைச்சரிவுகளில்
மனித விரலிடுக்குகளில்
சஞ்சரிப்பதாயிற்று

யாரும் அறியாத அதன் கம்பீரம்
மாசு படாது ஜொலித்தது

நானும் இந்த கவிதையும்

நானும் இந்த கவிதையும்
நண்பர்களே அல்ல
அப்படித் தோன்றக் கூடும்

சேர்ந்திருப்பதும்
ஒரே மூச்சைப்
பகிர்ந்து சுவாசிப்பதும்
விஷயங்களிலிருந்து
வெளியேறி வெளியேறிக்
கலைவதும் காரணமாக
அப்படித் தோன்றலாம்

இந்தக் கவிதை
ரொம்பவும் எளிமையானது
ஒன்றும் சொல்லாதிருக்கிற--
ஒன்றும் இல்லாதிருக்கிற
எளிமை

எனது எளிமையோ
இல்லாமையின் இருப்பை,
சொல்லாமையின் சொல்லைச்
சுமந்து திரிவது

எனக்கு
நுழையவும் வெளியேறவும்
வாசல்கள் இருக்கின்றன

இந்தக் கவிதைக்கு மட்டும்
எல்லாச் சுவர்களும்
திறந்து மூடித் தருவன

எனது தோழர்கள்
என் சூழலின் விளிம்புகளைத்
தொற்றி ஏறி
விரைகிறார்கள்
எனது பிரதேசப் பகல் நிலங்களின் ஊடாக

இதன் தோழர்கள்
பிரயாணமற்ற இதனை
விட்டுப் போனவர்களுமில்லை
சுற்றிக் கிடப்பவர்களுமில்லை

நானும் இந்தக் கவிதையும்
நண்பர்களே அல்ல
அப்படித் தோன்றக் கூடும்

என் சொந்தச் சோதனைச் சாலைக்கு

நான் போகிறேன்
காலவெள்ளத்திலிருந்து பிரிந்து
ஒரு மலட்டு பூமியில் தேங்கி வற்றிய
இந்தக் குட்டையை விட்டு
நான் போகிறேன்

பொய்களின் போதையில் புரளும்
வஞ்சகத்தின் வாயிலிருந்து
வெளியேறி
நான் போகிறேன்

அர்த்தம் வறண்ட
சொற்களிடையே
சாவின் மூச்சுப்பட்டதும்
நொறுங்கும் குமிழிகளிடையே
ரத்த வாசனையுள்ள
அழகிய பூக்களிடையே
உப்பு ஊற்றுக்கள் பெருகும்
இருளின் தியான மண்டபங்களிடையே
அலைந்து திரிவதைவிட்டு
நான் போகிறேன்


வாழ்வின் மடியிலிருந்து
சருகுகளாய் உதிர்வதினும்
மரணத்தின் மடியிலிருந்து
விதைகளாய்ச் சிந்தலாமே!

என் உறுதிகளை
இவர்களிடமிருந்து காப்பாற்றுவதற்காக
நான் பிடித்த
என் பிடியின் நெருக்கத்தாலேயே
அவைகள் கசங்கிப்போனபின்,

வரலாற்றுக் கூட்டில்
சோகத்தைச் சேகரிக்கும்
வண்டுகள் வருமுன்
இந்தப் பூவிலிருந்து
ஆவியாகிப் போகிறேன்

கணக்கில்லாமல் கிளைத்துவிட்ட
விரக்தியின் சிம்புகளில்
என் தினவுகளைத் தீர்க்க
இன்னும் எத்தனை நாள்
உராய்ந்து கொண்டிருப்பேன்


ஏதோ ஒரு விடையை
எப்போதோ என்னுள் வாங்கியதால்
எத்தனையோ வினாக்களுக்குத்
தாயானேன்
அந்த விடையின் மூலத்தைத்
தேடிக்கொண்டு போகிறேன்

என் எழுத்துக்களின்
கூரிய நுனிகளில்
தட்டுப்படாமல்,
எனக்கே தெரியாமல்,
என் பாடல்களின் உயிராய் இழையோடும்
அபூர்வமானதோர் ஏக்கத்தைத்
தேடிக்கொண்டு
நான் போகிறேன்

தடங்கள் பிடிபடாமல்
தகிக்கும் கவர்ச்சியோடு
எனக்கு முன்னால் நடந்து போகும்
ஒரு
மயக்கம் ததும்பும் சுருதியைப்
பிடிப்பதற்காக,
கனவைப் பிடிக்கக் கை நீட்டும்
குழந்தையின் திகைப்போடு
போகிறேன்

யுகமுகடுகளுக்கே சென்று
அங்கிருந்து
நிமிஷ நுரைகளோடு
நேரங்கள் சரிவதைப்
பார்த்துக்கொண்டிருப்பேன்

மௌனத்தின் பூமியைப்
பெருமூச்சுகளால் கீறி
துக்க விதைகளை இட்டு
உயிர் நிரம்பிய தாகங்களை ஊற்றிக்
கவிதைகளை வளர்ப்பேன்

பகல் இரவுகள்
தங்கள் வேஷங்களைக் களைந்துவிட்டு
உறங்கிக்கொண்டிருக்கும் இடத்தில்
நிழல்களின் நிழல்களை

-- மனித நெஞ்சினுள்
சந்தைகூடி நெரியும்
அந்த நிழல்களை --
நினைத்துக் கொண்டிருப்பேன்

என் இதயத்திற்குள்
சீற்றத்தோடு எரிகின்ற நெருப்பை
அணைத்துவிட்டுச்
சிந்தனையோடு எரிகின்ற
சுடர்களை ஏற்றிவைப்பேன்

அங்கே -- அந்த இதயத்தில்
ஊமைகளின் தர்க்கமேடையை
ஒரு ஞானமின்னலால்
நொறுக்கிவிட்டு
அந்த இடத்தில்
கனவுகளின் சொர்க்கத்தை அமைப்பேன்

அங்கே
வானத்துப் பூக்களுக்காகக்
கை நீட்டும் குழந்தைகளை
இந்த மண்ணின் முனகலைத்
தாலாட்டாக்கி
உறங்கவைப்பேன்

அதற்காகவே
கடவுளின் சோதனைச் சாலையைவிட்டு
என் சொந்தச் சோதனைச்சாலைக்கு
நான் போகிறேன்

கலைஞன் தோன்றினான்

நீல அரங்கில்
நிசப்த நெரிசல்

கறுப்புத் திரைகள் கட்டிய மேடையில்
கதாநாயகன் வரவெதிர்பார்த்து
நித்திரையை இமைக்
கத்திரி கொண்டு
துண்டித்துக்கொண்டே
மண்டியிருக்கும்,
கண்மட்டும் உள்ள
ரசிகரின் நெரிசல்

"எப்படி இருப்பான்?"
"எப்படி வருவான்"?
"என்னென்ன அதிசய
இன்பங்கள் படைப்பான்?"

விழிகளினாலே விவாதங்கள்
விடைகளினாலே கேள்விகள்

ஒற்றைப் பொன்விளக்கொளியில்
நீல அரங்கில் நிசப்த நெரிசல்
ஒருமுறை கூடப் பார்த்தறியாத
உள்ளங்கள் தோறும் உணர்ச்சித் துடிப்புகள்

இன்னுமவன் வரவில்லை
ஏக்கங்கள் ஏக்கங்கள்

அவர்களைச் சுற்றி
ஓடும் வினாடிகள்
மொய்த்தன பறந்தன
மொய்த்தன பறந்தன

ரசிகரின்
கண்ணொளிக் குளங்கள்
கலங்கக் கலங்க
உறக்கத்தின் உதடுகள்
மௌன மந்திரத்தை
முணுமுணுத்தன

ஒற்றைப் பொன்விளக்கொளியில்
கதாநாயகன்
நீல அரங்கில்
காலடி வைக்குமுன்
கண்மட்டுமுள்ள ரசிகக் கூட்டம்
மந்திரப் போர்வையுள்
மறைந்தே போனது

போனதும்,
ஒற்றைப் பொன்விளக்கு ஒளி இழந்தது
இழந்ததும்,
நீல அரங்கில்
கறுப்புத் திரைகளை விலக்கிக் கொண்டு

ஆயிரம் சோதி
அழகுகளோடு
கதாநாயகன் தோன்றினான்

பாவம்
ரசிகர் உறங்கவும்
கலைஞன் தோன்றினான்

இதயத்தை ஒரு தூரிகையாய்ச் செய்து

உலகின் விஷங்களை வெல்லவோ
உன்முகத்தில் இரண்டு மகுடிகள்?

உனது பார்வை
உன் கண்களுக்குச்
சுவாசமாயிருப்பது போலும்

ஆசையோடு
நெஞ்சு முழுவதையும் விரித்து
உன் பார்வைகளை
அள்ளியபோது
நான் வானமாயிருந்து
நட்சத்ரங்களை அள்ளிக்
கட்டிக் கொண்டதாய்
உணர்ந்தேன்.

பூவின் விரகத்தை
நாசி உணர்வதென
உன்பார்வைகள் என்னிடம்
உணர்ந்த துண்டோ?

என்னுள் நிறைந்து குவியும்
சூனியச் சுருள்களை
விரித்து விரித்து, அவை
என்ன எழுதுகின்றன?

உன் விழியிலிருந்து
அத்தனைக் கதிர்களும்
அத்தனைப் பூவிரலாய்
என் நரம்புகளில்
எந்த ராகங்கள் தேடி
அலைகின்றன?

இவ்வளவு மின்னல்களும்
மேய்ந்துதானோ,
என் வானம்
இவ்வளவு சுத்தமாயிருக்கிறது?

என்னுள்
புதுப்புது விடியல்முளைகளை
எழுப்பும்
பூவாளித் தூவல்களைப்
பார்வைகள் என்றா
சொல்வேன் தோழி?

உன் பார்வையின் ஸ்பரிசத்தால்
என்னுள் அலைகள் உறைந்து
அந்த நிச்சலனத்திலன்றோ
என் ஆன்மாவின் சுருதியை
முதன்முதல் கேட்டேன்

நீ.. பார்க்கவில்லை
சரிபார்க்கிறாய்

மூடிய மொக்கின் ரகசியமாய்
உன்
ஆரம்பகாலக் கனவுகளில்
படிகமிட்டதோர்
காதல்மிக்க சாயையுடன்
என்னை ஒப்பிட்டு --

நீ பார்க்கவில்லை
சரிபார்க்கிறாய்

எப்பொழுதேனும்,
உன்கடைவிழிக்கரையில்
உன் ஆழங்களின் ரகசியம்
கடற்கன்னிபோல்
வரும்; கண்ணயரும்

எப்பொழுதுமே, நான்
பொழுதுகள் தேங்கும் உன்
முற்றத்தில்
பெருமூச்சுக்கள் துடுப்பிடும்
தோணியாய் உலவுவேன்

உன் விழிகளினமுதம்
என்னுள்ளிறங்கி
என்னைப் புதுப்பித்திருக்கும்
இவ்வேளையில்
நான் புரிந்துகொள்கிறேன்;

'இந்த வினாடிகளின் ஏக்கத்துக்காகவே
இத்தனை வருஷங்களைத்
தாண்டி வந்தேன்'

'இந்தப் புதிர்கள்முன் பிரமிக்கவே
இத்தனை அறிவிலும்
புகுந்து வந்தேன்'

'இவற்றின் சாயல்களைச்
சித்திரிக்கவே
இத்தனைக் காலம்
இதயத்தை ஒரு தூரிகையாய்ச்
செய்து கொண்டிருந்தேன்'

இன்னொரு நான்

மௌனத்தின் கருவில் ஒரு
மாயகீதம் வளர்வதென
என் இதயத்தின்
நித்தியக் கருவாக அவன்
வளர்கிறான்

என்னுள் தோன்றி
என்னைப் புதிதாய்த்
தோற்றுவித்தவன் அவன்

சந்தனக் காட்டுச்செறிவில்
தென்றலின் அலைச்சல்போல்
என் கவிதைகளுள்
எப்போதும் அவன் அலைச்சல்

என் கனவுகள் எல்லாம்
அவன் உறக்கங்களில்

என் சுவடுகள்
அவன் பாதத் தூரிகைகளின்கீழ்

என் அந்தரங்கத்தின் வாசல்கள்
அவன் விழிகளில்

என் ஆழங்களில்
அவனையே நிரப்பியிருக்கிறேன்

என் கண்ணீரில்
அவனைப்
பளபளக்க விட்டிருக்கிறேன்

என் உயிர்ப்பூவில்
தேனாய் ஊறுகிறான்

நிறமற்ற என்வானத்தில்
நீலமாய் விரிந்தான்

எனக்குச் சிறகுகளைக்
கற்பித்தவன்
அவன்

கருகிப்போன
என் இறந்த காலத்தை
மறதியெனும் திரையாகி
மறைக்கிறான்

கருவிலிருக்கும்
என் எதிர்காலத்தை,
அவன்,
தன்னையே ஊட்டி
வளர்க்கிறான்

நீலாம்பரி

பகல்வெளியில் எங்கோ
பறந்து போயிருந்த உறக்கம்
இதோ
படபடத்து
விழிக்கூட்டிற்குத் திரும்புகிறது

இமை ஊஞ்சலில் சற்றே
இளைப்பாற ஆடிவிட்டு,
மௌனத்தின் மிருதுவின்மேல்
சிறகு பரப்பி,
என்னுள்ளிருக்கும் தன் குஞ்சுகளுக்கு
என் இதய அடியறைச் சேமிப்பை
எடுத்தூட்டி,
தன் உலகை
எனக்குள் விரிக்கவென
விழிக்கூட்டிற்குத் திரும்புகிறது ..

நானும்,
வடிவமற்ற கிண்ணத்தில்
வந்த மதுவை உறிஞ்சியவனாய்,
சலனங்கள் அற்ற --
என் வேறுபகுதியை நோக்கி
என் சுமைகளின்மேல்
நடந்து போகிறேன்

மரண மயக்கம்
சுழித்துச் சுழித்து
உறக்கமாய் நுரைக்கையில்
அந்த நுரைகளிடையே

ஏதோ புதுப்புதுச் சாயைகள்
வண்ணம் கொள்ளும்
வனப்பைப் பார்க்க
மிதந்து போகிறேன்

உள் உலகின் வானத்தில்
சரிகைத் தூற்றலில் நனைந்துகொண்டே
என்னைத்தானோ,
அன்றி வேறு எதையோ தேடிப்
பறந்து போகிறேன்

அடிநினைவு ரேகைகள்
தடந்தெரியாது ஓடும் இடங்களில் ...
சோகத்தின் வீறல்கள்
உறைந்த மின்னலாய்க் கிடக்கும் இடங்களில் ..
கண்ணீரின் ரகசியங்கள் கருவாகும் இடங்களில்

நான் உலாவப் புறப்படுகிறென்

மூலமுத்திரையற்ற
அனாதைக் கனவுகளின்
ஆவேச அரவணைப்பில் --
உறக்கத்தின் பட்டுவிரல் மீட்டலுக்கு
நானே வீணையாகிடும் மயக்கத்தில் --

இருளின் திகைப்புகள்
அடர்ந்துவிட்ட
இரவின் மந்திர முணுமுணுப்பில் --

என்னைநான் இழந்துவிடப் போகிறேன் ...

இதோ --
உறக்கம் விழிக்கூட்டிற்குத் திரும்புகிறது

உள்பகை

உடல்முழுதும்
என்னுள்ளிருக்கையிலேயே
உன்விரல் மட்டும்
எனக்கெதிராய் நீள்வதெப்படி?

ஓயாத என்`திரிகையில்
வெறும் மாவாயிருந்து
என் உருவையே திருடிப் போர்த்து
எனக்கெதிராய் விரல் நீட்டினாயா?

நீட்டாதே; அது
என் கண்ணுள்போய்க்
கால்வரை துழாவுகிறது

இருட்டை மீறிச்சீறும்
விரலின் வெறிப்பில்
வெளிக்கோடுகள் மூட்டுவிட,
உள்ளிருக்கும் அலறல் எல்லாம்
அகண்டத்தில் தூசாய்ப் பரவும்; நான்
லேசாகிப் பறந்து
மௌனத்தின் விழிகளில்
பூவிழுவேன்; வேண்டாம், நீட்டாதே!

இங்கு இப்படித்தான்,
சட்டம் நேராயிருக்கவே
ஓவியம் தலைகீழாய்,
இடவலமாய்,
முன்பின்னாய்,
நிறம் மாறியும்,
குணம் மாறியும் ...

ஆமாம், இங்கு இப்படித்தான்
கீறல்களின் வழியே
இடிமுழங்கும் கண்ணாடிக்கு --
சமயங்களில் --
அதனுள் பிறந்தழிந்த
பிம்பங்களின் நினைவுகள் ..
நினைவுகளை
ஒட்டுக் கேட்டாயோ நீ?

வேம்பின்கீழ்
போதி நிழல் படிவது
கண்டு அதிசயிக்கிறார்
இவரெல்லாம்

அறிவேன்
கண்கள் எவையும்
என்னைச் சுற்றுவது
என்முகம் திறந்து
உன்முகம் தேடவே

நசுங்கி நெளிந்து நீளுமென்மூச்சில்
உன்குரல் பழுவை
இவர்கள் அறிவார்கள்

உன் நாவைப் பறித்து, என்
காதுள் ஒளித்தேனோ?
உன் விரல் சூட்டுக்கோலை, வெறும்
கண்ணீரால் குளிர்விப்பேனோ?

வேண்டாம், நீட்டாதே
நீட்டிய விரலின்பின்
நியாயங்கள் நிற்கின்றன

கால்பந்து

வெற்றியும் தோல்வியும்
எல்லாம் விளையாட்டு
அடிபடும் பந்துக்கோ
அத்தனையும் வினை

குதிக்கட்டும்
காற்றிருக்கும் வரை;
குதித்துக் குதித்து
வானை உரசத் தாவி
மண்ணிலேயே விழுந்து
குரலிட்டுக்
குதிக்கட்டும்

வெளிக்காற்றினலைகள் --
எதிலும் அடைபடாத ஜீவன்கள் --
இன்னும் பிறக்காதவை
இதை அலைத்து இழுத்து
உயர்த்திச் சரிக்கையில்

உள்ளிருப்பது,
அடைபட்டதற்கு ஏங்கித்
தன் தோல்சிறையை
உருட்டி உருட்டிப் பாரக்கும் ...

ஏதேதோ புழுதிக் கால்கள் ..
அத்தனையும்
ஒருகாலின்
இடம் வேறுபடும் சாயைகள் --

எட்டி எட்டி உதைக்க
இது
தப்பி ஓடும்; இன்றேல்
எதிர்த்துப் பாயும்

முடிவில்
கால் கொடுத்த
கண்ணைக்கொண்டு
கால் காட்டிய திசை நோக்கி
அழுதழுது ஓடும்

காலன்றி வேறறியாமல்
காலின் கடும் உதைகொண்டோ
காலின் மெல்லணைப்புக் கொண்டோ
காலுக்குரிய முகத்தைக்
கற்பனை செய்து கொள்ளும்
நிமிஷத்துக்கு நிமிஷம்

அதுவே ஜெயிக்க
அதுவே தோற்க,
பந்துக்கு என்ன கிடைக்கிறது?

பந்தும் ஆடும்
காலும் ஆடும்
யாரை யார் ஆட்டுவிப்பது?

Saturday, January 12, 2008

மாலை -- போய்வருகிறேன்

ரத்தம் இருள்வது தெரிகிறது

கைகால் வீச்சு
இயக்கம் காட்டாத இயக்கத்தினுள் கரைந்து
நிற்பது ஆகவே இருக்கிறது, நடப்பது

வாய்க்கால் தாண்டி
மேட்டுப் பகுதியிலிருந்து
மெல்லிய அழைப்புக்குரல்,
சற்றே இடைநேரம்  விட்டு விட்டு,

அந்த பகுதிக்குள் புழங்கும் குரல்

நேரத்தைச்
சுருட்டிக் கொண்டிருக்கிறது நேரம்
வயிற்றில் புரண்டு பதுங்குகிறது

கவியும் இமைகளுடன்
கூடவே வானம்

பறவை ஒலிகளைப் பூசிச்
சருமம் மெத்திடுகிறது மாலை

என் மாலையைக் காட்டில் நிறுத்தி
விடைபெற்றுக்கொள்ள வேண்டும்
வீட்டுக்கு அழைத்துப்போக முடியாது
0-0

போய்வருகிறேன்

இருண்ட ரத்தம்
உன்னைச் சுழற்றித் தந்துகொண்டிருக்கும்

இமைகளுக்குள்
வானம் உன்னை வருடக் கொடுக்கும்

மாறிமாறி வருதல் ஒழிந்து
முற்றிலும் நாம் இழந்துகொள்ளும் வரை
இப்படியே நடக்கட்டும்

போய்வருகிறேன்

மாலை -- சிறுதெருக்கள்

சிறுதெருக்களின் வேளை அது

அடக்கமாக மகிழ
அவைகளுக்குத்தான் தெரியும்

எல்லாப் பருவங்களிலும்
இறுக்கம் சற்றுத் தளரும் நேரங்களில்
தரையிலிருந்து சிறிது மேலெழும்பின

எளிய சந்திப்புகளில்
கைகோத்து
மாலையின் அணைப்புக்காக
அண்ணாந்திருந்தன

ஒன்றுக்கொன்று
(நட்புக் குறையாமலே)
பரிமாற்றம் நின்றுவிட்டது; அதனால்
குப்பை சேரவில்லை

எந்த உத்தரவுமின்றியே
தீவிரமாக நினைப்பதை நிறுத்தின; அதனால்
அவற்றின் சுவாசத்தில்
மனிதவாடை மறைந்தது

தமது மூல அமைப்பைக்
கிளறுவதையும் நிறுத்தின; அதனால்
அவற்றின் மீது
பயமற்று இறங்கியது மாலை

வெறும் எழுத்துக்கள்
மணிகளைப் போல
அங்கங்கே சிதறிக் கிடந்தன
சறுக்கியும் பொறுக்கியும் விளையாடப்
பிள்ளைகள்தான் இல்லை

மாலை -- மூடிவைக்கப்பட்ட மாலை

நேற்றுப் போலவே இன்றும்
காற்றே வீசவில்லை

தெரு இரைச்சலும் நெரிசலும்
மனித சலனங்களின்
அனைத்து உராய்வுகளும்
மாலைக்கு
வெளியேதான்
நிகழ்ந்துகொண்டிருக்கின்றன

இறுக
மூடிவைக்கப்பட்டிருக்கிறது
இந்த மாலை

நடுமுற்றத்தை வற்றச் செய்த
தனிமை
இனி என்பது இல்லாமல்
இருக்கிறது

மாலையின்
உறைந்த ஸ்வரங்களின் அருகே
தொடப்படாமலும்
தொடாமலும்
என் அம்சம் பலவும் பிரிந்துவிட்ட
நான்

மூடிவைக்கப்பட்டிருக்கிறோம்
நாங்கள்

காற்று வீசவிருக்கும்
இரவின்
அபத்த ஆசுவாசத்திற்கும்
வெளிச்சம் ஆபாசப்படுத்தும்
பகலின்
அசட்டுக் கவர்ச்சிக்கும்
நாங்கள் திறந்துகொடுக்கப் போவதில்லை

எட்டி நெருங்க முடியாதவாறே
நீங்களும் நாங்களும்

மாலை -- கதை

அந்தி விளையாட்டு
முடிகிறது
வாசற்படிகளில் பிள்ளைகள்
வந்து தளைப்படுகின்றனர்

பேச்சும் சிறு சிரிப்புகளும் விசிறி
மஞ்சளாய்க் கனல்கிறது மாலை

கதை மனிதர்கள்
ஆழங்களிலிருந்து
மின்னிக்கொண்டு
வருவதும் போவதுமாயிருப்பர்

ஏதேதோ அடுக்குகளிலிருந்து
ஏதேதோ அரூபங்கள்
பறந்து படிந்து மறையும்

காலத்துள் நிகழ்ந்திராத காலம்
தகதகத்து
பிள்ளைகளின் கண்களில் இறங்கும்

கதைகள் சற்றே வண்ணம் கலங்கி,
எனினும் உள்வெளிச் சஞ்சரிப்பில்
உயிர் சேகரித்துக்கொண்டு
பழைய இருப்பிலேயே
புதிது புதிதாகும்

எல்லாவற்றுடனும் இழைந்து
இருத்தலே
காத்திருத்தலாக
நான்

மாலை -- பிணம்போல்

வெளியில் போய்ப்
புழுதிவிசாரித்துத்
திரும்புவதற்குள்
எல்லா மாலைகளும்
--என்னுடையது தவிர --
கூடிவிட்டன

அசைவுகளை அதட்டி
இன்னது இன்னவைகளின் விளையாட்டை
ஊதி நிறுத்திக்
கூடிவிட்டன

தலைதலையாகத்
தடவித் துயிற்றும்
இருளை ஆடி

யோசனை அமிழ்ந்து மறையும்
பிரவாக அமைதியில்
மூச்சை அடக்கிக் --
கூடிவிட்டன

அடிவான் விளிம்பில்
பறவைக் கூச்சல் மொய்த்துப்
பிணம்போல் --
என்மாலை

மாலை -- அசதி

உயரமான கல்சுவருக்குப் பின்னால்
புழுதி படிந்த தென்னைமடல் மீது
குத்திச் சரிந்து
குவியலாய்ச் சூரியக் கதிர்கள்

கோடிக்கணக்கில் கைகால் முகங்களும்,
முரண்டு செய்து
உந்தி எழுந்த உக்கிரங்களும்
சோர்ந்த கதிர்களுடன் பின்னிச்
சுருண்டிருக்கின்றன

கனக்கத் தொடங்கும் மாலை

அவ்வளவு கனமும்
செறிந்து இறங்கிப்
பாதங்களில்

பாதங்களை நோக்கி இறங்கும்
இமையினுள்
நிலைகுத்திக் கிடக்கும் நிழல்கள்

சுழல்வதும் சுற்றுவதுமான
இயக்கங்கள்
நினைவிழந்துகொண்டிருக்கின்றன

கடைசி அந்தி போலும்
0-0

அசதி

காலையில்
இவ்வழியே போனவர்கள்
திரும்பி வருகிறார்கள்
தோற்றமின்றி
வெறும் அசதியாக

அழைப்பு ஒலி
ஒன்றே ஒன்று மட்டும்.
புழுக்கத்தில் திணறும் ஒலி,
அம்மாவுடையதா?
உள்ளறையிலிருந்து புறப்பட்டு
உள்ளும் புறமும்
அனைத்து அசதிகளுடனும்
புரண்டு கரைந்து
வரும் ஒலி

மாலை - செய்முறைகள்

மனசின்
அனந்தகோடிச் செய்முறைகள்
கிளர்ந்துகொள்கின்றன,
விடை என ஒன்றும் இல்லை
என்பதைச் சுட்டிய வண்ணம்

செய்முறைகள் வழியே புகுந்து
ரகசியமாய் உள்ளேறு

'மாலையின் ஒரு மூலையில்' *,
கடந்துபோன முகங்களிலிருந்து வரும்
புகை
அலைவு கொண்டிருக்கிறதா?
புகை தடவாத நிலங்களின் வழியே
உள்ளேறு

உள்ளேறு, உன் ஊற்றுத் துளைகளை
அடைத்திருக்கும்
அடைமொழிகள்
கரைந்து வெளியேறக்
காண்கிறாய் இதோ

இதோ உன் மொழியின்
பளீர்ப் பிரசன்னம்
மூடிக்கொள் கண்களை

வெளியிட்டு விடாத உன் பத்ரத்தை
உராய்ந்த வண்ணம்
பறந்துபோன பறவைகள்
மறுருசிக்காகத் திரும்பும்
திறந்துகொள் கண்களை

செய்முறைகள்
உயிர்த்து உலாவித் திரியும் வரம்பின்மையை,
உப்புப் பரியும் கோவில் சுவர்களை,
சலசல அரசிலைகளை,
ஈர மண்தரையில் பன்னீர்ப் பூக்களை,
நேரத்தை வாசனைப் படுத்தி உணரும் உன்னை --
நான் என்றே கண்டு நீ
திடுக்கிட்டு நிற்க நேரும் போது (மனசின்...)

"ஜே.ஆல்ஃப்ரட் புரூபிராகின் காதற்பாடல் -- டி.எஸ்.எலியட்" *

மாலை -- யாருமில்லா இரவு

யாருமில்லா இரவில்
நீண்டு உயர்ந்த தேக்குகள்
காட்டின் எல்லைக்குள்
நடமாடித் திரியும்

யாருமில்லா இரவுகள் அடர்ந்து
நெரிந்து கிடக்கும் கானகம்.
வெளிப்பட்டுத்
தம்மைக் கண்டுகொள்ளத் துடிக்கும்
தாபங்கள்

ஆயினும்
இந்தப் பரபரப்பிலும்
மெல்லென
நாவுக்கடியில்
திரளும் புரளும்
என் சங்கீதம்

இந்தப் பரபரப்பிலும்
வீட்டிற்குள்
செடிகளின் பகல்நேரப் பேச்சுகள்
இணைப்பு கழன்று
தம் ஆதி வடிவங்களில்
திளைத்திருக்கும்

நாவுக்கடியில்
திரண்டு புரண்டு
யாருமில்லா இரவுகள்
தம் ஆதி நடமாட்டங்களோடு

மாலை -- பாறைப் பிரதேசம்

மாலை சரசரவென
நுழைந்து கொள்கிறது

கனலும் எனது
அனைத்துத் தரைகளையும்
பனிப்புகை செலுத்திக்
குளிர்விக்கிறது

எங்கே போயினர்
வீட்டு மனிதர்கள்?
தேடவும் தோன்றவில்லை

எனது பாறைப் பிரதேசத்துடன்
தனித்து நான்

மலைக்குவடுகள்
குனிந்து கீழே இறங்க,
சாலையோரக் குழிகள்
குழியினின்றும் வெளியேற--

இதுவே
பதற்றம் தணிக்கும் பரவசம்

இதோ
பிறை பிறந்ததும்
எங்கெங்கிருந்தோ ததும்பி
வெள்ளம்
எனது பாறைப் பிரதேசத்தை
மூழ்கடிக்க இருக்கிறது

பிரதேசம் எதுவுமின்றி
நான் சூழ்ந்து நான்

இனி
இருக்கிறேன் என்பதில்லாத இருப்பு
இல்லை என்று
இருக்கும்

மாலை -- பாழ்

சீட்டி போன்ற
அந்தக் கூரிய ஓசை
குத்திச் செருகித்
தூக்கிச் சுழற்றியது என்னை

விர்ரென்று
வாடைக்காற்றும் கொஞ்சம்
சதையோடு போயிற்று

தெருவில் யாரும் இல்லை
பாழும் தெரு
அஸ்தமனம் தாண்டி
யாரும் இருப்பதில்லை

மங்கல் விளக்கொளிகளிடையே
செருகிக் கனத்துத்
தொங்கும் இருள்
ரணம் கனல எரிந்தது

இருத்தலின் நிமித்தம் --
தெருவும் நானும் என
இருத்தலே.
யுகத்தொலைவில் தெரிந்துகொண்டிருக்கும்
முகங்களுக்காகவோ
தோளை உரசிப் போகிற
தோள்களுக்காகவோ அல்ல

பாழும் வீட்டினுள் நுழைந்து
முடங்கிக்கொண்ட
பாழும் தெரு
--என்னைப் போலத்தான் நீ--
என்றது

வீட்டினுள்
சுழன்றுகொண்டிருந்தாலும்
மையக் கூர்மையின்
உறவற்ற பிணைப்பில்
பாழ்கண்டு
படிந்திருந்தது
எனது பாழ்.

மாலை -- எவைகளும் என்னவும்

மலைச்சரிவு மரச்செறிவிலிருந்து
பிறப்பு விவரமின்றி வந்தவைகளை
வீட்டு வாசலில் அமர்த்திப் பேசினேன்

என்னைக்
கரும்பச்சை நிறமும் அதன் நடமாட்ட வெளியும்
கவித்துக்கொண்டிருந்தன
0-0

எங்கள் எதிரே
கற்பிதங்கள்
விலகி ஓடி
எட்டச் சுழன்று
ரீங்கரித்தன
என் புத்தக அலமாரியில்
நான் இல்லாத நேரம்
வந்து குடைந்து செல்பவை
0-0

வாசலில் அமர்த்தி
எவை என்று தெரியாதவைகளோடு
என்ன என்று தெரியாதவற்றை
உக்கிரத்துடன் பேசியிருந்தேன்

எங்களின் பின்னே
மறையும் சூரியனின் மௌனம்
நிரம்பிக் கிடந்தது

பேச்சின் வலி,
சோகம்போல் தெரிந்த அழகு,
நாங்கள் என்ற நான் --
எதைப் பேசினேன்?

பேசினோம்

எங்களைச் சூழ்ந்து
எங்களைக் கவனிக்காமல்
மூசுமூசென்று தேம்பித்
தன்னைத் தணித்துக்கொண்டிருந்த
மாலை

கற்பிதங்களின்
கடையலுக்கு அப்பால்
எங்கும் நிறைகின்ற இன்மைகளோடு
ஒன்றித் தணிந்த
மாலை

மாலை -- சருகுகளடிப் பொழுது

சருகுகளினடியில்
புதையுண்டு
லேசாக மூச்சுமுட்டிய
சுகம்,
எல்லாவற்றாலும் தொடப்பட்டு
எதையும் தொட இயலாதிருந்ததன்
மருட்சி,
வலிக்காமல்
தொற்றிக் கிடந்த துக்கம்,
அறியாமையின் மீது
பதியப் பதிய
ஊர்ந்து திரிந்த பரவசம்,

பாட்டிமார் கண்ணிடுக்கில்
விரல் துடிப்பில்
சுருக்கங்களோடு கூடியிருந்த
எளிய அருமை ...

அருமையாய்க் கழிந்தது
சருகுகளடிப் பொழுது
0-0

மறதியின் மதிப்பு உணராமல்
அதன் அரைவட்ட மூடிக்குள்
உலகளாவியிருந்திருக்கலாம்

பெயர் தெரியாத பறவைகளின்
அந்திப் படபடப்புகள்
உடம்பை ஊடுருவிப் போயிருக்கலாம்

சிறுமணிகளின்
இடையறா ஒலிபோல் ஒரு கதகதப்பு
அஸ்தமனம் உதிர்த்த சருகுகளடியில்
படர்ந்திருக்கலாம்
0-0

எவரையும்
என்னையும்
நுழைய விடாதிருந்த
பிரக்ஞையின் வெற்றிடம்
மாலையின் தடவலில் இணங்கிக்கொள்ள

--அருமையாகவே கழிந்தது
சருகுகளடிப் பொழுது.

மாலை -- என் வடிவு

வானம் தெரியும் நடுமுற்றம்
மரக்கட்டிலில் நெருங்கி அமர்ந்து நாங்கள்

சமயலறைச் சுவருக்குப்போக மிஞ்சிய
கொஞ்சம் சிமினி விளக்கு வெளிச்சம்
எங்களருகில், பராக்குப் பார்த்துக் கொண்டு

அம்மா சொன்ன கதை
வழக்கம் போல
மெல்லிய திரைச் சீலைகளுக்குப் பின்னிருந்து
நிகழ்ந்து காட்டியது

திரவமாகித் ததும்பிய நான்

என்னிடம் இருந்ததால்
என் வடிவில் இருந்த நான்

மாலையோடு பேசித் தளிர்க்கும்
கதை
என் வடிவில் இருந்த கதை

யோசிப்பும் நின்றுபோன
மௌனம்
என் வடிவில் இருந்த மௌனம்.

மாலை -- ஆறுவயதில்

நடுவில் நான்
நீங்கள் சுற்றிலும்

பதற்றம் இல்லைபோலப்
பாவனை செய்தோம்

சந்திப்பின் தாங்கொணாத வதை.

நம்மைப் பிணித்தது ஒரு விதி
மாலைக் காற்றைக் கொண்டு

காற்றின் ஓரமாக
யாருக்கும் காட்டப்படாத
பாதைகள்
விரைந்தோடின;
என் விரல் ரேகைகளில் வந்து முடிந்தன

ஆள் புழக்கமற்ற என்
பாதைகளைக்
கிழித்துக் குதற
வேட்டைவெறி கொண்டிருந்தீர்கள்

பாறைகளை
ஊதி உருட்டித் தள்ளும்
என் மலைகளின் மீது
என் கனல் சுற்றிவந்தது

கனல் மீதேறவும்
கைகால் வீசினீர்கள்

என்ன தெரியும் எனக்கு
அந்த ஆறு வயதில்?

எனது தூரத்தைத் தாண்டிய பார்வையைத்
தொடராது விட்டுவிட,
சூழும் கிறுக்கல்களிலிருந்து விடுபட்டு
மையம் என ஒன்று இன்றி
இருக்க

என்ன தெரியும்?

கனல்மீதேறக்
கைகால் வீசிச்
சுற்றிலும் நீங்கள்
நடுவில் நான்

Wednesday, January 9, 2008

மாலை -- குழப்பம்

குழப்பம் என்றான் நண்பன்
எது அவனைச் சூழ்ந்து நெருங்கியிருக்கிறதோ
அதனை

ஊடுருவியபோது
உண்மைதான் அவன்கூற்று
என்று தெரிந்தது

அவன் வீட்டவர் வேறுமாதிரி.

பளபளவென்று நிச்சயங்களைத் துலக்கி
மாலை விளக்கொளியில்
மின்னச் செய்கிறார்கள்

இருள் கலவாத வெளிச்சம் பேசுகிறார்கள்

நூல் பிடித்து அமைத்த
மனசின் சந்திகளில்
உரக்கச் சந்தித்துத்
தழுவிச் சிரித்து மகிழ்கிறார்கள்

பார்க்கக் கண் தேவையில்லை,
பார்ப்பதற்கும் இல்லை
என்றிருக்கும் ஒன்றை,
மாலைச் சலனங்களிடையே
சிறு ஒலி எழுப்பித் திரியப் பார்த்ததாக
இமைகளைக் கவித்துக்கொண்டு
பரவசத்துடன் சொல்கிறார்கள்

சந்தையிலிருந்து திரும்பும் கால்களில்
சாமர்த்தியம்
வழிநிழலில் அமர்ந்து
முனைகள் சந்திக்க
வளையம் வரையும் கைகளில்
லாகவம்

புள்ளியிலிருந்து புள்ளிக்கு
இடைக்கணத்தில்
அபார துல்லியம்

யாரும் யாரும்
எதுவும் எதுவும்
தெளிவே அவர்களுக்கு;
குழப்பம் என்கிறான் நண்பன்

குழப்பம் என்கிறான்
மாலையின்
இறுகலுக்கும் இளகலுக்கும்
நடுவில் நின்றபடி

மாலை -- விலகல்

மீண்டும் மீண்டும் வாய்ப்பது
இதே திசை
எட்டிலும் பத்திலும் அடங்காத திசை

விலகலுக்கென்று உள்ள திசை

அகன்று கறுத்த
தனிமையின் மீது
திட்டுத் திட்டாக
முள்வெடித்த பசுமை

இப்போதுதான் -- சமீபகாலமாக
உருள்வதை நிறுத்திவிட்ட பாறைகள்
சிறுசிறு இடைவெளி விட்டுச்
செருகியிருந்தன
0-0

இந்த இடத்திலிருந்து
இந்த விதமாய்ப் பார்க்க
எல்லாம் --
பாறை பசுமை எதுவாயினும்
தம்மை விட்டு வெளியேறி
விலகிப் போவது
தெரிய வருகிறது

பொழுது துறந்து
அலையவும் திரியவும்
எங்கும் அடையாதிருக்கவும்
வாய்க்கிற திசை இதுதான்
0-0

முள்வெடித்த பசுமையும்
செருகியிருக்கும் பாறைகளும்
ஏதோ இது நிலம்தான் என்று காட்ட,

நிரந்தர விலகலில்
என்னை நீடிக்கவிட்டு
எல்லா நேரமும்
என் பின்--முன் வரும்
என் மாலை சொல்கிறது
இது ஏதோ திசைதான் என்று

விலகலுக்கென்று உள்ள திசை

மாலை -- காலியிடம்

உண்மை
தன் பழைய இடத்துக்குத்
திரும்பி வந்து விட்டது
எப்போதும் காலியாயிருக்கும் இடம்

அது இல்லாத இடம் எது
என்பது பெரியோர் வாதம்.
வாதம் தெரியாமல்
எவர் பேச்சையும் கவனிக்காமல்
இதையே கவனித்திருக்க நேர்கிறது,
திரும்புவதை, திரும்புவதை மட்டும்.

புழுதிப் படலத்தோடு மிதந்துபோகும்
இடைச்சிறுவர்கள்
பசியின் பார்வையில் எரியும் விறகு
கடைசி மஞ்சள் கிரணத்தின்
தயங்கிய மூச்சு
--எதுவாயினும்
என்மீது பட்டவுடன்
விலகிப் போகின்றன, கவனம் கவராமல்.

இடம் இல்லாதிருந்ததில்
இடம் பரவிக்கொண்டது,
காலியிடம்

வாசலில் தொடங்கி
வானம் அடங்கி
தான் இன்றி இருண்டு கிடக்கும்
மனசின் வெளிவரை
எங்கும்

காலியிடம் காலியிடம்

மாலை -- காட்டு மலர்ச்சி

திரியில் சுடர் இறங்கிக்கொண்டிருக்கிறது

கதைகள் தீர்ந்துபோயிருந்தன

முகங்களில் சூழலின் கனம்

மெலிதாக அசையும் வீடுகளும்
தடதடக்காது நகரும் தெருக்களும்

செயற்கைச் சுவாசத்துடன்
வாசற் கோலங்கள்

கூட்டித் தள்ளிய குப்பைகளிடையே
உப்பி ஊறிக் கிடக்கும் வார்த்தைகள்..

0-0

மறுபடி மறுபடி வருகிறேன்
எங்கும் போயிருக்காமலே

இங்கிருந்து
இங்குபோய்த்
திரும்பி
இதோ இந்த மாலையும்
பீடிகைகளின் மீது
பற்றிப் பிடித்து எரிகிறது

சடசடத்து எரிவதன்
புகைச்சுகம்
0-0

தீர்ந்துபோன கதைகளின் எல்லையில்
இருள் முயலும் ரகசியம் எது?

புரிபடவில்லை -- எனினும்
முயல்வது கண்ட கிளர்ச்சியில்
கண்ணீரில் தொடுப்பதற்கில்லாத
காட்டு மலர்ச்சி

அதுகொண்டு
ஒரு சிறு சைகையும்
எண்ணத் துகளும்கூட
இடையிடுவதற்கின்றி
ஒன்றாகிவிட்டோம்
நானும் மாலையும்

மாலை -- பயில

கிடை வரிசையில்
நிழல்கள் நீண்டு நெளிந்து
தடமின்றிப் புதைந்துவிடும்

இப்போது அவை
வேறு மொழியில்
வேறு தரைகளில்
அமிழ்ந்திருக்கும்

கரையோரத் தென்னைகளுடன்
நட்பு எளிமை துறந்து
ஆறு
தன் அந்நியம் கொண்டு இருளும்
திசைநினைவு
விடுபட்டு ஒடுங்கி
எது இறுதியோ அதைத்
தொட முடியாதெனத் துக்கித்துத்
துழாவிப் போகும்
0-0

உருவினுள் மறைந்து
உருவிழந்த
மாலையைப்
பயின்றுகொண்டிருப்பேன்

மணல் பிசைந்து
மாலையின் துடிப்பைக் கணிப்பேன்

பயில --
அரவமற்ற
என் மூலைகளினுள்
உறிஞ்சப்படுவேன்

மாலை - நிலவிரிவு

வலித்தது என்று
மாலையைக் கீழே இறக்கிவிட்டிருக்கிறோம்

வெறித்த
பாலைப் பொழுதைப்
போர்த்துக்கொண்டு கிடக்கிறோம்

செம்மண் பரப்பை
குத்துச்செடி விரிவை
பாறைக் கும்பலை
மேலிட்டு
மூடிப் பரப்பிக்கொண்டு கிடக்கிறோம்

அருகே
எட்டித் தொடும் எளிமையுடன்
கடல்நடுத் தனிமையை
இணைத்துக் கிடத்தியிருக்கிறோம்

சாவு சொன்னதை
ஸ்வரப் படுத்திப்
படுக்கை வசமாக
விரிய விட்டிருக்கிறோம்

அடிவான உராய்வில்
முகம்பதியக்
கிடப்பதில் திளைத்து
நில விரிவாகி,
சுற்றுமுற்றுமாகி,
இருக்கிறோம்.

மாலை -- த்வனி

நான் வெட்டவெளியாகுமுன்பே
என் தீர்மானங்கள்
கசிந்து வெளியேறிப் போய்விட்டதை
உணர்ந்தேன்
ஆ! மிகவும் நல்லது

அவசரமில்லாத
சிறிய ஓடைகள் நடுவே
கூழாங்கற்களின் மீது
என் வாழ்வை
மெல்லத் தவழவிட்டேன்

வீட்டு முற்றத்தில்
கூழாங்கற்களின் நடுவே
ஓடைகளின் சிரிப்போடு
வெளி-உள் அற்று
விரிந்துபோகும் என் வெட்டவெளி

0-0

விட்டுப்போன நண்பர்கள்
அர்த்தங்களைத் திரட்டிச் சுமந்து
வெற்றி உலா போகிறார்கள்
விளக்கு வரிசை மினுமினுக்க

உண்மையின்
அனைத்துச் சுற்றுவாசல்களிலும்
புகுந்து திரிந்து
திருப்தியில் திளைக்கும்
என் நண்பர்களுக்கு,

கிடைக்கும் இடைவெளிகளை எல்லாம்
தம் கையிருப்புகள் கொண்டு நிரப்பும்
அவர்களுக்கு

என் வெட்டவெளியைக் காட்டமாட்டேன்

0-0

வெறுமைப் பாங்கான
எனது வெளியில்
ஒளியும் இருளும் முரண்படாத
என் அந்தியின் த்வனி

த்வனியின் மீதில்
அர்த்தம் எதுவும் சிந்திவிடவும்
விடமாட்டேன்

மாலை -- எது

தூசி படிந்த புளியமர வரிசையை
வைதுகொண்டே
மணலில் வண்டியிழுக்கின்றன மாடுகள்

வண்டுகளும் பறவைகளும்
தோப்புகளுக்குள்
இரைச்சலைக் கிளறி
எதையோ தேடிக்கொண்டிருக்கின்றன

இருண்டு நெருங்கி வளைக்கும்
மலைகளுக்கு நடுவே பள்ளத்தாக்கில்
இங்கும் அங்கும் பாய்ந்து நிரம்பித்
ததும்புகிறது
என்வலி

பொழுது நிரம்புகிறது
ஒரு இடுக்கு விடாமல்
0 - 0

தூசி படிந்த இரைச்சலுக்கடியில்
சாத்வீக கனத்துடன்
இது எது?

இருள் இருண்டு காட்டிய வெளிச்சத்தில்
இடறாத என் பாதங்களினடியில்
இது எது
என் சாரங்களின் திரட்சியுடன்
வலியுடன்

அலங்கரித்த விநோதங்களை
அகற்றிவிட்டு
எளிய பிரமைகளின் வழியே
என்னைச் செலுத்தும்
இது எது?

மாலை -- தணிவு

காடு எரிந்த கரிக்குவியலில்
மேய்ந்து களைத்துத்
தணிந்தது வெயில்
என்னோடு சேர்ந்து

இதோ இதோ என்று
நீண்டு கொண்டே போன பாதைகள்
மடங்கிப்
பாலையினுள், முள்வெளி மூழ்கச்
சலனமற்று நுழைந்துகொண்டன

விவாதங்கள்
திரும்புவதற்கு அடையாளமிட்டுப் போன
வழிகளில்
அறைபட்டுத் திரும்பின

முடிவுகள்
அரைகுறைப் படிமங்களாக வந்து
உளறி மறைந்தன

பசியும் நிறைவும்
இரண்டும் ஒன்றாகி
என் தணிவு

வேறொரு விளிம்பைச்
சுட்டிக் காட்டாத
விளிம்பில்
தத்தளிப்பு மறைந்த
என் தணிவு

நிகழும் போதே
நின்றுவிட்ட என் கணம்
குளிரத் தொடங்கியது
என் தணிவைத் தொட்டு

மாலை -- பரட்டை

நெறுநெறுவென்று பேசும்
ஆடிமாதம்

கூரைகள் பறக்கும்; கூடவே
கூரைகளின்கீழ் நெரிந்து கிடந்தவை
என்றும் பேசியிராததைப்
பேசிப் பறக்கும்

செம்புழுதி கலந்து சிவக்கும் என்
சுழற்சிகள்
கண்காதுகளில் நிறைகின்றன
00
ஒருதுகள் மிஞ்சாமல்
பறந்து போய்விட்ட
முதிய பொட்டல்வெளி
மெல்லிய இருள் விரித்து,
'அமர்ந்து பேசலாம் வா'
என்கிறது

பரட்டையாய் வறண்ட மாலை
இட்டுச் செல்கிறது
நான் திரும்பும் போதெல்லாம்
வழிவிட்டு விலகி

'முன்பின்கள் கலைந்து
முறை என்று ஆகிய பரப்பின்மீது
சொல் கலைத்து வீசிய சூறையை
அளைந்து பேசுவதற்கா?
வரமாட்டேன்'

ஆயினும்
பரட்டையோடு மட்டும் பேச்சு
எனக்குண்டு
சுத்தமாய் வெறுமையாய்க்
குருட்டொலிகளால் ஆன பேச்சு
00

குருட்டொலிகளின்
அலைவீச்சில்
யுகயுகமாய்ச் சேகரமான
வேறொரு
கருமணல் விரிவு

கலையாதிருப்பது
கருமணல் விரிவு மட்டுமே

மாலை -- மாற்றுருவம்

வீட்டு வாசலைத்
தொட்டுத் ததும்பிய மழைவெள்ளம்

முன்பொரு சமயம் கேட்ட
நள்ளிரவு ஒப்பாரிக் குரல்
கரைந்திருந்தது அதில்

மூழ்கினவை என
ஆளற்ற
பேச்சுக் குரல்கள்,
மழையோசையுடன் போட்டியிட்டுக்கொண்டு

நனைந்து
மாற்றுடையின்றி
மாற்றுருவமுமின்றி
இருந்தேன்.

ஓயாது தர்க்கிக்கும் தூறல்

கசங்கிக் கலைந்து கிடக்கும்
நாட்களின் குவியலிலிருந்து
எழும் புழுங்கல் வெப்பம்
இதவு

மாட்டுக் கொட்டகையிலிருந்து
சிற்றிருளை உராய்ந்துகொண்டு வரும்
பெருமூச்சு
ஆசுவாசம்

தலைப்பில்லாத ஒரு தவிப்பு
தவிப்பின் தனி இதம்

நனைந்து
மாற்று இடமில்லாதிருந்த
என் மாலையைப் பற்றிக்கொண்டு
மாற்றுருவம் இல்லாதிருந்த நான்

மாலை -- காத்திருத்தல்

விஷப்புகை மேவிய வானம்
மூச்சுக்குத் தவிப்பது தெரிகிறது

அறிந்தவைகளின் மறுபுறங்கள் திரண்டு
மின்னி இடித்து
வெறியோடு வருகின்றன
அல்ல அல்ல அல்ல என்று
பொழிந்து பிரவகிக்க
அழித்துத் துடைத்து எக்களிக்க
வருவது தெரிகிறது

அடர்வனங்களின்
குறுக்கும் நெடுக்குமாக
ஆவேசக் காட்டாறுகள்
பதறி ஓடி
வாழ்வைப் பயிலும்

உண்டு -- இல்லை என்பவற்றின் மீது
மோதிச் சிதறி
அகண்டம்
ஒரு புதிய விரிவுக்குத் தயாராவது புரிகிறது
00

காத்திருக்கிறேன்
இதுவே சமயமென
எனது வருகைக்காக

என் குடிசையில் வாசனை தெளித்து
சுற்றிலும் செடிகொடிகளின்
மயக்கம் தெளிவித்து
அகாலத்திலிருந்து
இந்த மாலைப்பொழுதை விடுவித்து --

காத்திருக்கிறேன்
மறுபுறங்களிலிருந்து
வெற்றி தோல்வியின்றித் திரும்பும்
என் வருகையை நோக்கி

மாலை -- என்மலை

வாசலில்
சிறுசிறு சந்தடிகளுடன் இசைந்து
வெளிச்சம் குறைந்துகொண்டுவரும்

தொடுதல்களைக்
கணக்கிட்டுக்கொண்டிருக்கும் இருப்பு
மங்கியும் தெளிந்தும்
ஒருநிலையற்று இருக்கும்

வெளியேறத் துடிப்பேன்

ஆனால் எப்படி?

கதவு சுவர் கூரை எல்லாம்
வெளியேறி மறைந்துபோயிருக்கும்

வெளியேறுதல்
இல்லை என்று ஆனபின்
எனக்காகக் காத்திருந்த என்மலை
சற்று அசைந்து
குவடுகளால்
எனதொரு எல்லையை வருடும்

இங்கே படரும் இருளைச்
சிறிது சுண்டினால் கூட
என்மலை எனக்குப் பதில்சைகை தரும்

என்னைச் சுற்றி நிரம்பும்
காட்டுக் களிப்பு

இருப்பின் அநிச்சய பாவத்தில்
இது எது ஒரு சுகம்,
கண்பார்க்க எட்டித் திரியும்
ஞாபகம்போல்.

00

இப்படித்தான் என்று
நிதானமாகப்
பிறந்துகொண்டிருப்பேன்
எனது மலைவேரின்
ஒரு சிறு நுனியிலிருந்து

மாலை -- திரும்புதல்

புரண்டு படுக்க இடமின்றி
ஒற்றையடிப் பாதை
சலிக்கிறது

கடந்துபோன காலங்களின்
சுவடுகள் மீது
கரித்து வளரும் புல்
00

திரும்புதலின் குற்றோசைகள்
படிந்து இறங்கி
அடிமண்ணின் உளைச்சலில்
புழுங்கி அவியும்

இது எப்படித் திரும்புதல் ஆகும்?

ஏதேதோ மூலைகளைப்போய் விழுங்கி
வெடித்து
வேறாகி வருவது
திரும்புதலா?
00

வாசனைகள் இருண்டு
அதனாலேயே
வடிவம் பெறுகின்றன

ஆடுகள் மலையிறங்கித்
தலைதாழ்த்தி வருகின்றன

வானம் சுற்றிலும்
வழிந்து இறங்குகிறது

பேச்சுக்கு முந்திய திருப்பம்
தயக்கங்களால் நிரம்புகிறது

இனிவரும் நூற்றண்டுகளில்
இந்த சதுக்கம்
ஊமை வெளியாக
உறைந்து வெளிரும்
00

வந்தாயிற்று

அதோ தொலைவில்
விளக்குப் புள்ளிகளைத்
தன்மீது தரிக்கும்
ஊரின் மாலை

இங்கே என்னருகே
எனது மாலை
பிரபஞ்ச சோகம் திளைத்து

மாலை -- அடியில்

காடுகளுக்குள்ளிருந்து
தப்பி வந்தன ஓடைகள்

நீருக்கடியில் போய்
நினைவுகள் ஒளிந்து கொண்டன

புகை வராதபடி
பெருமூச்சு விட்டுக்கொண்டிருந்தன

கரையில் சவுக்குத் தோப்புகளிடம்
அச்சம் கொண்டிருந்தன

சவுக்குத் தோப்புகள்
வேறு கவனமின்றி
வழி தெரியாத கூச்சல்களை
நிர்வாகம் செய்துகொண்டிருந்தன

00

அஸ்தமனக் கதிர்
ஊடுருவிப் பார்த்தபோது
நீருக்கடி நினைவுகள்
தம் உட்புறத்தைச்
சென்றடைந்திருந்தன.

எண்ணத் தொலையாத
தமது பிம்பங்களை
விட்டுச் சென்றிருந்தன,

காடுகளிடையே ஊர்ந்து பரவிக்
கதறித் திரிய
00

இப்போது
சல்லடையில் சலித்து இறங்கிய நுட்பங்களாக
பூமிக்கடியில்
என் இயக்கங்கள்

இயக்கங்களின்
தரைமட்ட பிம்பமாக நான்,
காடுகள் ஊர்ந்து பரவக்
களமாக

சுற்றி

செறிவூட்டியபடி
உன்னை நான் சுற்றிவருகிறேன்

இன்றுபோல் இல்லாமல்
இன்னொரு நாள்போல் இல்லாமல்

எங்கோ போய்க்கொண்டிருக்கும்
வெட்டவெளி
நின்று வேடிக்கை பார்க்க
உன்னை நான்
சுற்றி வருகிறேன்

உன்னைச் சுற்றி
வட்டங்கள் உருவானபின்
விலகிக் கொள்கிறேன்

இனி
வட்டங்கள்
செறிவூட்டியபடி
உன்னை சுற்றிவரும்

உன்னைச் சுற்றி
உன் செறிவு உருவானபின்
வட்டங்கள் விலகிக் கொள்ளும்

பின்
உன் செறிவு
செறிவூட்டியபடி
உன்னைச் சுற்றிவரும்

இடைவெளிகள்

யாரும் கவனியாதிருந்தபோது
இடைவெளிகள்
விழித்துக்கொண்டு
விரிவடைந்தன

நட்சத்திரத்திற்கும் நட்சத்திரத்திற்கும்
அர்த்தத்திற்கும் அர்த்தத்திற்கும்
உனக்கும் உனக்கும்
விநாடிக்கும் விநாடிக்கும்
இடைவெளிக்கும் இடைவெளிக்கும்
என்று

இடைவெளிகள் விரிவடைந்தன

வெறியூறி வியாபித்தன

வியாபகத்தின் உச்சத்தில்
மற்றெல்லாம் சுருங்கிப் போயின

ஆங்காங்கிருந்து
இடைவெளிகள் ஒருங்கு திரண்டு
அண்டவட்டமாயின

வட்டத்தின் விளிம்பைச் சுற்றிலும்
சிற்றெறும்புகளாய்
வாழ்க்கைத் துகள்

வட்டத்தின் சுழற்சியில்
நடுவே தோன்றி வளர்ந்தது
பேரொளி

அதற்குப் பேச்சு வரவில்லை
சைகைகளும் இல்லை
எனினும் அதனிடம்
அடக்கமாய் வீற்றிருந்தது
நோக்கமற்று ஒரு
மகத்துவம்

தெருவில் நாம்

வருவோம் போவோமாய்த்
தெருவை நிறைப்போம்

தெரு கனத்து திகைக்க

வாசல் திண்ணைகளில்
படிகளில்
வான்வெளி முழுவதும்
நெரிந்து பெருகுவோம்

பிம்பங்களும் குரல்களும்
பார்வைகளும் எண்ணங்களும்
பாவனைகளும் சாயைகளுமாய்
அடையாளம் குலையாது
அடர்ந்து செறிவோம்

ஜன்னல் கதவை
ஒருக்களித்துத் திறப்போர்
முகங்களில் அறைவோம்

தெருவிலிறங்கி நடக்கத் துணிவோரை
மொய்த்துக் கொண்டு
பரவச மூட்டுவோம்

காலம் ஒற்றியெடுத்துப்
பரிமாணங்களுள் அடைத்த
நகல்கள் அழிந்த பின்னும்
அழியா அசல்களாய்த்
தெருவை நிறைப்போம்

தெரு கனத்துத் திகைத்து அமிழ

கேள்விகளை
உதறி விசிறி விடுவோம்
நிரந்தரமாக அவை
தோள்களின் மீது
தொற்றித் தொடர

எங்கும் இல்லாதிருந்து
எங்கும்
வருவோம் போவோமாய்த்
தெருவை நிறைப்போம்

தீர்மானங்களைக்
கடைந்து எடுத்துவிடாத
சுழற்சி
திளைப்பு என்றில்லாத
திரிதலில்
தெருவை நிறைப்போம்

சூத்திரங்கள்

தனித்து விடப்படும் போது
சூத்திரங்கள்
மெல்லவந்து
சூழ்ந்து கொள்ளும்

தமது உருவாக்கத்தின்
சிறிய பயனை
எனக்குத் தரத் துடிக்கும்

என்னைப்
பேசவிடாமல் தடுக்கும்

நான்கு மூலைகளையும் தொட்டு
என் அறைக்குள்
தீவிரமாக நடக்கும்

ஒன்றோடொன்று
பேசிக் கொள்ளாது
ஆனால்
முன்பே பேசிக்கொண்டது
தெரியும்

காதலித்தும் சண்டையிட்டும்
வடிவழிந்து வடிவுற்று
வளையவரும்

துல்யம் என்று சொல்லித்
தமது கோடுகளைத்
திரும்பக் கொண்டுவந்து
சேர்க்கும்

இருப்பின்
மெல்லிய சூட்டை
உறிஞ்சுவதும் ஊதுவதுமாயிருக்கும்

என் மூடிய கைகளுக்குள்
என் இல்லாமை
புதிதெனத் தோன்றாது
புகுந்திருப்பதைக் கண்டால்
சூத்திரங்கள் நழுவி விலகி
வேறு பாவனைகள்
மேற்கொள்ளும்

நாதம்

நெளிநெளியாய்
மனோலயங்களைக்
காற்றில்
கோதிக்கொண்டு

வருவோர் போவோரின்
சமிக்ஞைகளைச்
சுற்றிலும் நடத்திக் கொண்டு

உலாவ அழைத்துப் போகும்
ஸ்வரங்களிடம்
வார்த்தைகள் கேட்டுக்கொண்டு

-- என்ன செய்கிறாய்?

தெருவில் இறங்கியதும்
திடுக்கென்று ஒட்டி
நடுக்கும் பனிக்காற்று

ஓடையில் கால்வைத்ததும்
புல்லரிக்கக்
காலைக் கடித்துப் போகும்
மீன் குஞ்சுகள்

தொலைவை உணராதிருக்கக்
காதில் விழும்
நட்சத்ரங்களின் சிரிப்பு

எங்கெங்கிருந்தோ வந்து
மையத்தில் எனக்
குவியும் உன்
காலடித் தடங்கள்

-- என்ன நடக்கிறது?

எப்போதும் நீ கேட்பது
நாதமல்ல
நாதத்தில் படியும் உன்
நிழல்

நாதமென நீ காண்பது
நாதத்தில் உன் அசைவுதரும்
அதிர்வு
நீ காணாதது
அதன் உயிர்

புலன்களில்
பொட்டலம் கட்டப் பார்க்கிறாய்

பிரமைகளின் உட்செறிவில்
தனித்திருந்து
பிரியம் வளர்க்கிறாய்

நாத அலையெனக்
கற்பிதம் கொண்டு
கரையோரங்களில்
தேடுகிறாய்

நாதம்
அலைபாய்வதெப்படி
இருப்பது அது

அலைவதன்று

Tuesday, January 1, 2008

சொல்லாதிருத்தலும் எளிது

சொல்வதற்கென்று ஒன்று
சொல்லும்போது கமழும்
சிலநாள் கழித்து,
தெருவில் போவோரைப்
பரட்டையாய் வழிமறிக்கும்

சொல்லும்போது தனித்திருக்கும்
சிலநாள் கழித்து,
அழுக்குக் கந்தல் மூட்டைகளுடன்
உட்கார்ந்திருக்கும்

சொல்லாதிருந்ததற்கும்
சொன்னதற்கும்
இடைவெளியில்
புல்வளர்த்து
பூமியை மூடும்

தொடர்ச்சியாய்ப்
பேசவராது

ஆயினும்
பனியிரவில்

ஏதோ உந்துதலில்
ஊர்நெடுகப் புலம்பி உறங்கும்

எப்பொழுதும்
எதன் ஓரத்திலும் நின்று
ஒட்டுக் கேட்கும்

கூர்ந்துவிழும்
பார்வைகளை நழுவி
திடுக்கிட
இல்லாதாகும்

பேசப்படுவதில் சிக்காமல்
பின்னல்களைப்
போட்டுவிட்டுப் போகும்

சொல்வதற்கென்று ஒன்று
சொல்லுதல் யார்க்கும் எளிது
சொல்லதிருத்தலும் எளிது

கோடு

கோடு வரைவதெனின்
சரி
வரைந்து கொள்

இப்புறம் அப்புறம்
எதையேனும் ஒன்றை
எடுத்துக்கொள்

எடுத்துக் கொள்ளாதது
எதிர்ப்புறம் என்பாய்

இப்போதைக்கு
அப்படியே வைத்துக்கொள்

முதலிலேயே
மறுபுறத்தை எடுத்துக்கொண்டிருந்தால்?

மாறி மாறி
எதிர்ப்புறக் குழப்பம்

இருபுறமும் உனது?
இருபுறமும் எதிர்ப்புறம்?

எதுவும்
எவ்வாறும்
இல்லை என்று
சலிப்பாய்

களைத்து உறங்கும் உலகம்
ஆரம்பத்திலேயே
முடிவைத் தடவியெடுக்க
நின்றாய்

இது என்றோ அது என்றோ
இரண்டும் இல்லையென்றோ
வருகிறது
உன்முடிவு

அதனால்
கோடுவரைவதெனின்
வரைந்து கொள்

அவர்

கொஞ்சம் கொஞ்சமாக
விலகி
விலகலில் நீடித்தாயெனில்
நீ வாழ்கிறாய்
என்றார்

முடிந்து போனதாய்ப்
போக்குக் காட்டும்
கணங்களில்
ஒட்டிக்கொண்டு சிதறினாய்
உன் சாவைச் சரிபார்த்துக்கொள்
என்றார்

பின்னும்
நீ இருப்பதாக உணரத் தாமதமாகி
இருந்ததாக  உணர்வது வழக்கமெனில்
வாழ்க்கை
எட்டி நின்று உன்னை
முறைப்பதை,
சாவின் சஞ்சலத்தை
ஒருபோதும் நீ காணப் போவதில்லை
என்றார்

சொற்களின் கும்மாளத்திலும்
எண்ணங்களின் ஆடம்பரத்திலும்
உன் நிகழ் அனுபவம்
உயிர்ப்படங்கியது
அறியாய்

அறியாய் மேலும்
நிகழ்வில் நின்றே
நிகழ்வினின்றும் விலகும்
நெறி எது என்பதை

கூடவே நிகழ்ந்துவா
கொஞ்ச நேரத்தில் நீ
நிகழ்வுடன் அருகே
இணைகோட்டில் ஓடுவாய்

ஆச்சரியமாகவே உன் இருத்தல்
உனைவிட்டு விலகி உன்னுடன்
ஓடிவரக் காண்பாய்

என்றார்

இன்னும் சொன்னார்.

விடைகள்

விடைகள்
மிகவும் மெலிந்தவை

ஏதோ சுமந்து வருவன போல
முக்கி முனகி வியர்வை துளித்து
நம் முகத்தில்
திருப்தி தேடுபவை

தரையில் கால்பாவாது
நடக்கவும்
நீரில் நனையாமல்
நீந்தவும்
அறிந்தவை

முந்தாநாள்
ஒரு விடையை
எதிர்ப்பட்டேன்

என்னைப் பார்த்தவுடன்
அது
உடையணிந்து
உருவுகொண்டது

தன்னை ஒருமுறை
சரிபார்த்துக் கொண்டதும்
எங்களைச் சுற்றி
ஒரு அசட்டுமணம் பரப்பிவிட்டு
என்னை நேர்கொண்டது

நான்
ஒன்றும் சொல்லவில்லை

நெளிந்தது

கலைந்து மங்கும்தன்
உருவை
ஒருமித்துக் கொள்ளக்
கவலையோடு முயன்றது

சுற்றிலும் பார்த்துவிட்டு
ஒருமுறை
என்னைத் தொடமுயன்றது

நான்
எதுவுமறியாத
பாவனை காட்டியதில்
ஆறுதலுற்றுக்
கொஞ்சம் நிமிர்ந்தது

எதிர்பாராது வீசிய காற்றில்
இருவரும்
வேறுவேறு திசைகளில்
வீசப்பட்டோம்

திரும்பப்போய்த்
தேடிப்பார்த்த போது
சாமந்திப்பூ இதழ்கள் போல்
பிய்ந்து கிடந்தன
சில சாகசங்கள் மட்டும்

முன்னால்

முன்னால் போவது
எப்போதும் ஒரு வசதி

திரும்பிப் பார்க்க நேரும்

யாரும் வரவில்லை என்றால்
'முன்னால்' என்பதன்
புது அர்த்தம் புரியும்

புல்பூண்டற்ற வெட்டவெளியும்
வெயில் கொளுத்தும் வெட்டவானமும்
உன்னை என்ன செய்வதென்று
தவிக்கும்

           0

எரிந்து கருகும் நேரத்தை
எச்சிலால் ஈரப்படுத்திக்
கூட்டிப் போகலாம்

உச்சியிலிருந்து
நகர மறுக்கும்
சூரியனை
யாருக்கும் தெரியாமல்
தொட்டுப் பார்க்கலாம்

           0

முன்னால் போவதென்பது
முடிவை முந்திப் போவது

உனக்கு முன்னாலும் போவது
உன் அசைவுக்கு முன்னாலும் தான்

அதனால்
'முன்னாலு'க்கு முன்னால்
போவது

போகப் போகப் பார்ப்பாய்
முன்னால்கள் சற்றுத் தயங்கும்போது
அடுக்கடுக்காக
அவற்றுக்கும் முன்னால்கள் இருப்பதை

குறிப்பிட்ட திசையிலன்றி
சுற்றிலும்
எல்லாத் திசைகளிலும்
முன்னால்கள்
கானல்போல் அசைந்து
அழைக்கும்

ஒவ்வொரு கணத்தின் பிளவிலும்
வெவ்வேறு பிரதேசங்கள்
வெளிப்படும்

என்ன நினைப்பாய்
முன்னால் என்பதை

என்ன நினைக்காதிருப்பாய்

எதுவாயினும்
முன்னால் போவது
எப்போதும் ஒரு வசதி

அந்தி

மனசின் உச்சியில் குவிந்து
முரடுபட்டது அந்தி

எதுமுன் எதுபின் என்று
தயக்கத்தில் தேங்கியது
இயக்கம்

அடிமண்ணின் வெப்பத்தில்
புழுங்கியது மூச்சு

இனம்புரியாது
இருண்ட அழுத்தம்

உணர்வின் அணுக்கள் சிதறி
உறைந்தன
வாசற் படிகளில்

ஓசைகள் இறுகிப்
பாறைகளாயின

அவை செத்தன எனக்கொண்டு
சுருதி கிளம்பிக்
கமழ்ந்தது

பழகிய பரவசங்கள்
சக்தியற்றுக் கிடந்தன

மந்திரங்கள்
வெளியேறிச்
செய்வதறியாது திகைத்துக்
கூட்டமாய் அமர்ந்தன
மரத்தடியில்

என் வார்த்தைகள்

என் வார்த்தைகளை நான்
இழந்து விட்டதாகச்
சொன்னார் அவர்

என் ஆசை அது -- ஆனால்
உண்மையில்லை

உணர்ச்சிகளின் இரைச்சல் இடுக்கிலும்
நடுக்கத்தின்
இரண்டு அசைவுகளின் நடுவேயும்
மரணம்
விளையாட்டாக என்னை
அழைத்துப்போன சந்தர்ப்பங்களிலும்
ஒதுங்கி நின்றிருந்தது
பிறகு தொடர்ந்தன

எல்லைகள் உடைந்து
மனசில்
தன்பொறுப்பற்ற வெளி
விரிவு காண்கையில்
மூச்சடக்கிக் காத்திருந்தன


என் சப்தக் கூறுகள் பிளந்து
மௌனம்
நீலம் காட்டியபோது
அபத்தமான சைகைகளுடன்
வெட்கமற்ற வெறுமையில்
புரண்டு கொண்டிருந்தன
வார்த்தைகள்

முன்பின்னைக் கடக்க முயன்று
மூர்க்கம் மேலிட்டபோது
என் வார்த்தைகளின் பீடிப்பே
என்னை என்னிடத்தில் சேர்த்தது

அர்த்த மாயையில்
சிக்கிக் கொண்ட
என் வார்த்தைகளைத்
தப்பிப்போக முயன்ற முயற்சிகள்
வீணாகின
மனசின் சங்கேதம் புரிந்து
தவிதவித்துத் தொடர்கின்றன
வார்த்தைகள்

இருப்பிடம் எதுவுமின்றிப்
போகும் இடங்களின்
பயண விவரங்களைச்
சேகரித்துக் கொண்டிருப்பன,

சுற்றிச் சுற்றி
விசிறல்களில்
தோற்றம் கொடுத்து
மயக்குவன

என் வார்த்தைகள்

என்றாலும்
இவைகளைத் தப்பமுடியவில்லை
இதோ இந்தக் கணம்வரை

இருத்தல்

இருப்பதொன்றே
முடிவற்றது
போவது என்றால்
தவிர்க்க முடியாதது
முடிவு

'போதலை நிறுத்திவிட்டால்
இருத்தலாகும்'
எனக்கேட்டு,
நிறுத்த,
அது வெறும்
போதலில் இருத்தலேயானது

இருத்தலைத் தேடிப்
போவதென்றால்
இறுதியில் அதைப் பிடிக்கலாமோ?

ஆனால்
எதன் முடிவுமன்று இருத்தல் என்பதால்
போதல் வீண்

இருப்பவர்களை விசாரித்தால்:

இருத்தலில்
எது செய்கிறீர்கள்?

எது செய்வதும்
இருத்தலாகாது
இருத்தலில் போதலாகிவிடும்

இருத்தலினுள்ளே
என்ன இருக்கிறது?

எதுவுமில்லை
இருந்தால்
இருத்தல் இயக்கம் காட்டும்
இயக்கம் இருத்தல் அல்ல
போதல்

பின் இருத்தல் என்னதான்?

இல்லாதிருத்தலே
இருத்தல்

விதம்

விதம்
என்ன என்று தெரியாமல்
விழிப்பதே வழக்கம்

விதம்
மெல்லச் சிரித்து
இரக்கத்தோடு பார்த்து
அசைவு எதுவுமின்றிக்
கடந்து போகும்
(அப்படித் தோன்றும்)

எனக்கோ
விதம்
என்ன என்பது புரியாது

விதம்
கிடத்திய வேளைகளை
எழுப்பப் பார்த்ததில்

சூழலிலிருந்து
பிரிபட்டு
உருக்கொண்டெழும்
விஷயங்களை
ஊடுருவியதில்

விதம் புணர்ந்த
வாழ்க்கையை
நீள்கோடுகளில் ஆராய்ந்ததில்

எதிலும் தோல்வி

ஒவ்வொரு வினாடியும்
உலகைச் சுற்றி போர்த்திய
தன் சவ்வுப் படலத்தை
அச்சுப் பதிவுடன்
உரித்துக் கொண்டு நகர்வதை
இருந்து இருந்து பார்த்தாயிற்று

இருபுறமும்
ஏமாற்றும் எளிமைகளால்
தொடரப்பட்டும்

கபடத்தின் வெளிர் விரிந்த
வானத்தைத்
தடவிக்கொண்டும்
நடந்து நடந்து பார்த்தாயிற்று

எதிலும் தோல்வி

காத்திருக்கிறேன்
விதம்
விதமாகவே
தென்படுவதற்காக

எல்லைக் கோடுகள்

தூரத்தே
எல்லைக் கோடுகள்
திமிராக மினுக்கின

தம் தடத்தில்
துள்ளிக் குதித்து
விறைப்பாக நின்றன

குதூகலம் புரையேறிச் செருமின

வானம் காரையுதிர்க்க
அதிர்ந்தன

சுற்றிலும் காற்றைப் புகைத்து
ஆவி காட்டின

ஏகமாய்க் கமழ்ந்து
உயிர் உறிஞ்சி ஈர்த்தன

குரூரமாய் வெறித்துச்
சவாலிட்டுக் கூவின

பரபரப்பு உள்ளோடி
அவற்றின் மூட்டுகள்
கிறீச்சிட்டன

தம்முள்
தேடல்கள் ஊடுருவிய துளைகளை
அவசரமாய் அடைத்து மழுப்பின

தூரத்தே
எல்லைக் கோடுகள் -- இங்கே
கூச்சம் என் கால்களைக்
குடைந்தது

லயிப்பு

லயிப்பைத் தவறவிட்ட போது --

வெயிலடித்துக் கொண்டிருந்தது

வழமைபோல்
பொறிகளிலும் கதிர்களிலும்
அடையாளம் கொடுத்துக் கொண்டிருந்தது
ஒளி

தோற்றங்களிடம்
தோற்றுக் கொண்டிருந்தோம்

தலப்புக்களில் அடங்கிப்
பத்தி பிரிந்திருந்தனர் மக்கள்

சங்கீதம்
நிறங்களைக்
கற்பித்துக் கொண்டிருந்தது

வாய் ஓயாமல் பேசிக்கொண்டிருந்தது
தத்துவம்

வார்த்தைகள் செய்துகொடுத்த
இடவசதிக்குள்
வாழ்க்கை
மீண்டும் நுழைந்து
திருப்திப் பட்டுக் கொண்டது

ஏகமாய்ப் போர்த்திருந்த சுருதி
விலகவும்
மீண்டும்
தன் பொய்வடிவங்களில்
வியாபித்தது வெளி

அதிர்வு

அதிர்வுகளில் தெரியும்
சுகம் பற்றிப்
பேச்சு வந்தது

கொஞ்சம் பொறுத்து
அவன் சொன்னான் - 
இருக்கும் சுகத்தையே
அதிர்வு
விசிறிவிடுகிறது

இவன் சொன்னான் -
விசிறத் தெரிவதே
கல்வியும் கலையுமானது

மறுபடி அவன் -
போயுணர்வதும்
வருவித்துணர்வதுமாயிற்று
வாழ்க்கை

மீண்டும் இவன் -
இருந்ததனை
இருந்துணர்வதென்பது
இல்லாமல் போனது




சாயைகளைத் தின்கிறாய்

கூடக்கூட வந்து நின்று விடுகிறாய்

இளம்பொழுதுகள்
பேசிக்கொண்டிருக்கும்போது
செருமிக் காட்டுகிறாய்

சிலசமயம்
உயிர்ததும்பிப்
பளபளத்து
சமிக்ஞை எதுவும் செய்யாமல்
பின்தொடர்கிறாய்
திருப்பங்களில் மட்டும்
சற்று முன்னால் போய்நின்று
மறுபடி பின்னால் நடக்கிறய்

தனிமையின் சந்தை இரைச்சலில்
புரண்டெழுந்து
புழுதி கிளப்புகிறாய்

வனாந்தரங்களின் போது
மூச்சடைக்கும் அடர்த்தியில்
என் பாதத்தின்மீது
மெல்லத் தலைவைக்கிறாய்

என் பிளவுகளிலிருந்து
ஆவியெழுந்தால்
இளைத்தபடி பார்த்துப் படுத்திருக்கிறாய்

இருள் நிகழும்போது
இயலாமையின் சோகம் தேக்கி
அண்ணாந்து நிற்கிறாய்

என் அற்ப இயக்கங்களில்
உனக்கொரு
வடிவம் அமைந்தபோதே
நினைத்தேன்
நீ
சாயைகளைத் தின்பாய் என்று

அப்படித்தான் நடக்கிறது

வெறிப்பு

வாசல் வெறிச்சிட்டது

அசையாமல் தொங்கிக்
காய்ந்திருந்தது மாவிலைத் தோரணம்

காலம்
ஊசியிட்டுக் குத்தி மல்லாத்திய
பூச்சிகளாய்
மனிதர்கள் -- புகைப்படங்களில்
பேசமுயன்று
சிரித்து திகைத்து இப்படி

மரப்பெட்டிமேல்
சில நாளைய தூசி

விருட்டென்று
வீசியடித்த காற்றில்
அடுக்கிலிருந்து
சிதறிப் பறந்தோடி
மூலைகளில் கிடந்து
வெறித்தன
எண்ணங்கள்

எப்போதும் விரட்டப்படத்
தயார் நிலையில்
ஒட்டியும் ஒட்டாமலும்
புழுங்க`ல் மணம்

சமாதானமாகிக் கொண்ட
சக்களத்திகள் போல்
இருளும் இருளும்

பின்னே
கிணற்று மேடையில்
சீக்கிரமே வந்துவிட்ட
பௌர்ணமி நிலாவின்
விவரம் தெரியாத
வெறிப்பு


திரும்பும்போது
ஒருகுரோட்டன்ஸ் கொத்தைக்
கிள்ளியெடுத்துக் கொண்டேன்
ஒரு ஞாபகத்துக்காக

நெருங்குவது

நெருங்காதிருப்பதன் விளைவு
நெருங்கியிருக்கிறோம் என்று
நினைப்பது

ஓரொரு சமயம்
பின்வாசல் வழி
கற்பனை வந்து
உண்மையைச் சொல்லிப் போகும்

நாம் நெருங்கியதில்லை

அவரவர் இருப்பில்
அவரவர் இருக்க
நெருங்குவதெப்படி

இருப்பை நீத்து நெருங்குவதென்றால்
அவரவர் என்பதில்லாமல்
யார்யார் நெருங்கியது

நெருங்கியவர் இல்லாது
நெருக்கம் என்ன

நாம் நெருங்கியதில்லை

வடிவங்கள்

வடிவங்கள்
வழக்கிழந்து விடும்

குறிப்பிட்ட தேடல்
அலுப்பாகி,
'தேடலினின்றும் விடுதலை'
என்பதில்
திகைத்துச் சுருளும்
அனுபவம்

வடிவங்களை நெருக்கி நிறுத்தி
அதிகாரம் செலுத்திய
போல் போலில்லை இரண்டும்
செத்துப் போகும்

வடிவங்கள் இன்றித்
தொடர்புகள் ஏது
வேய்ந்த தொடர்புகள் நாலாபுறமும்
விலகிட
வெளிச்சம் வியாபிக்க

இதோ

காலம்
கண்ணில்படும்

பரிமாணமற்ற காலத்தில்
நீந்தித் திளைக்கும்
பரிமாணம் விலகிய
'பொருள்'கள்

அபத்தம்

ஆவேசம் திரிந்து
அபத்தமாக உருக்கொண்டது

ஒலிஒளிக் காட்சி முடிந்து
நினைவு எதுவுமின்றித்
திரும்பும் கூட்டம்

இலைபூ பறவைக்கூடு என்ற
பேதம் மரத்து
மழுங்கி நின்றன
சலையோர மரங்கள்

இலக்கு மறந்து
எதிர் எதிர் பாய்ந்து
தன்னைத்தான் முட்டிக்கொண்டு
கல்லாய் நின்றது
காற்று

புலன்களிடையே
இடைவெளி நெடிதானது

இடைவெளியில் புரண்டு
சாம்பல் மணக்கக்
கிடந்தது இரவு

மூளையின் அறைகளுக்குள்
அசடு கனத்தது

வெட்ட வெளியில்
முன்னால் போகவும்
பின்னால் போகவும்
ஒரே நேரம் அடியெடுத்து வைத்தபோது
நான் பார்த்தது:

ஆகாயம் நோக்கிக்
கைகளைத் தலைகளை ஆட்டிப்
பேசத் தொடங்கினர்
ஆணும் பெண்ணுமாய்
அறுபது எழுபதுபேர்
வெவ்வேறு நிலைகளில்
உட்கார்ந்தபடி

வெளிச்சம் இளித்தது

இன்று

இன்று
நீ வரவேண்டிய நாள்
எனினும்
வரமாட்டாய்

ஓடிமறைகையில் மட்டும்
புலனில்படும் சாயைகள்
இப்போதெல்லாம்
மங்கத் தொடங்கியிருக்கின்றன
அவை நிகழ்ந்த இடம்
நிரம்பும்
எளிய கேள்விகளால்

எங்கிருந்தோ
எங்கோ தொடர்புற்று
விஷயங்கள் பாய்ந்தோடும்

சரி
இம்முறை
பள்ளத்தாக்கில்
பனியின் மிச்சம் அதிகம்

இருண்டு இளைப்பாறும் மாலை
கருங்கல் படியில் சாய்ந்து
பக்கத்து மலைத்தொடரில் லயித்து
நான்

இன்னும் சிறிது பொழுதில்
இருளின் அணுக்களைத் தொற்றிக்
காட்டுச் செடிமணம்
வந்து உறைக்கும்

த்வனி எதுவுமற்ற
முரட்டுப் பிரவாகம்
திடுமெனச் சூழ்ந்து கொள்ளும்

எப்போதும் போல்
பார்வையின் ஆரம்பமுனை
இடம்பிசகும்
நானில்லாத இடத்திலிருந்து
தொடங்கிக் கொள்ளூம்

வரமாட்டாய் நீ
எனினும் இன்று நீ
வரவேண்டிய நாள்

நான் இல்லாமல் என் வாழ்க்கை

நான் இல்லாமலே
என் வாழ்க்கை
எதேச்சையில்
அருத்திரண்டது

வடிவ விளிம்புகளைக்
கற்பிக்க
நான் இல்லாததால்
நீல வியாபகம் கொண்டது

எதத்துற்ந்தோம் என்று
அரிய வேண்டாத
நிம்மதியில் திளைத்தது

உணர்வுகளின்
பொது ரீங்காரம் மட்டும்
தொடர
நிழல் வீழ்த்தாமல்
நடமாடியது

கூரைகளுக்கு மேலே
தன்மைகளின் எதிர்ப்பை
அலட்சியம் செய்து
அசைவு தெரியாமல்
பறந்து திரிந்தது

பூமியைத் துளைத்து
மறுபுறம் வெளிவந்தது

பிம்பங்களின் துரத்தலுக்கு
அகப்படாமல்

நுட்பம் எதுவுமற்ற
சூனியத்தை அளைந்தது

மரணப் பாறையிலிருந்து
குதித்து விளையாடியது

காலத்தின் சர்வாதிகாரம்
புகைந்து அடங்குவதை
வேடிக்கை பார்த்தது

தத்துவச் சுமை கரைந்து
தொலைதூரத்து வாசனையாஇ
மிஞ்சிற்று

எனது குறியீடுகளின்
குறுக்கீடு
இல்லாது போகவே
தன்னைத் தனக்குக்
காட்டிக் கொண்டிருப்பதையும்
கைவிட்டது.

நமக்குத் தொழில்

நிலைகளைத்
தேடியடைவது தொழில்

நிலைகளின் இடைவெளிகள்
மங்கலாகி,
கணக்குகளினின்று நழுவும்

நிலைகளில் நிற்கப்
பிடிவாதம் சிலருக்கு

சுற்றும் பூமியின்மீது
சுற்றித் திரிவதென
நிலைகளில் நிலையறுதல்
தொழில்

நிலைகளைப்
பற்றி
முரட்டுத்தனம் செய்து
குதறுவதென்றால்
சிலருக்குப் பிடிக்கும்

நிலைகள்
நிமிஷத்தில்
சலனமின்றிச்
சரியாகும்

நிலைகளைத் தொடாமல்
நில்லாமல்
நிலைதீர்வது தொழில்

நிலைகள் மட்டுமன்றி
அவற்றின்
நீட்டிப்பும் வசப்படத்
தவமிருப்பது
சிலருக்குப் பிடிக்கும்

வசப்படுத்தல் என்ற
அறியாமையை
உணர்ந்து
எதுவும் வசப்படலை விரும்பாமல்
நிலைகளினூடே
சலனமாதல் தொழில்

தாண்டித் தவிர்த்து
நிலைகளை விலக விரும்புதல்
சிலருக்குப் பிடிக்கும்

வாழ்வைச் சாவினின்றும்
பிரித்துக்காணும் அபத்தம்
இதுவெனக் கண்டு
நிலைகளை நிலைகாணல் தொழில்

விரமின்றி வாழ்க்கையை
நிலைகளில் நிரப்பலும்
ஒட்டாது திரட்டலும்
தொழில்

என்ற ஒன்று

சூன்யம் இருந்தவரை
எல்லாம் சரியாயிருந்தது

எதன் இல்லாமையையும்
சூன்யத்தில் அடக்கிச்
சமாதானப்பட முடிந்தது

ஏழுகடல் ஏழுதீவு ஏழுவானம் கதைகேட்கும்
குழந்தைகளுக்கு
இறுதியில் கிடைத்தேவிடும் சூன்யம்
என்ற
குறுகுறுப்பு இருந்தது

நாமும்
நீ நான் என்ற
அடையாளச் சிக்கலைப்
புறமொதுக்கிவிட்டு
நிம்மதியாயிருக்க முடிந்தது

கேள்விகள் வந்து
கொத்தித் தின்ன நின்றால்
நம்மைக் கொடுத்துவிட முடிந்தது
இல்லாமலாவது இருப்போமல்லவா
என்று

எதிர்மறைகளின்
இரைச்சலை
அமைதியாய்
ரசிக்க முடிந்தது

பூமியைத் தொடும் அடிவானத்திடம்
அலட்சியம் காட்ட முடிந்தது

தைரியமாக
விஷயங்களைப்
பகைத்துக் கொள்ள முடிந்தது
எப்படி இருப்பினும்
இவை போகமுடியாத இடம்
நாம் போக இருக்கிறது என்ற
நம்பிக்கையில்

சூன்யம் என்ற ஒன்று
இருந்தவரை
எல்லம் சரியாயிருந்தது

தெளிவு

பிம்பங்களிலிருந்து
விடுபடவும்
என் மலயடிவார நகரின்
மாலைக்கற்று வந்து வருடவும்
சரியாயிருந்தது

என்றைக்குமில்லாமல் இன்று
பின்னணி ஓசைகள் இன்றி
முனகலின்றி
வந்து நின்றது இருள்

சாம்பல் நிறம் மாறுமுன்
விடைபெற்றுக் கொண்டது வானம்

சொல் அவிதலும்
இரவு அவிழ்தலும்
இசைவாகின

யாருடையதென்றிலாத
சோகம்
அரைக்கண் பார்வைபோல்
கிறங்கித் திரிந்தது

எதையும் தொட்டிராத
என் புதிய கைகள்
எங்கெங்கும் நீண்டு
எதையும் தொடாது
திளைத்தன

தனித்தலின் பரவசம்
அனுபவத்தின் கையிருப்பில்
அடங்காது
நழுவி
விரிவு கொண்டது

தெளிவு என்பது பொய்
என அறியாது
தெளிவைத் தேடிப் பிடிவாதம் ஏறிப்
பாமரப் பயிற்சிகளால் களைத்து மகிழ்ந்த
பழைய நாட்களை நினைத்துக் கொண்டேன்

COMMUNICATION

பெருமூச்சின் கரிபடிந்து
பொழுது மங்கிற்று

அவன் கேட்டதும்
நான் சொன்னதும்
கனமற்றுப் போயின

வானம்
எப்போதும் போல்
இருளடித்துக் கிடந்தது
ஆனாலும்
மழைத்துளியுடன்
அரிதாரம் உதிர்த்தது

மனசுகள் உராய்ந்து
பொறிகிளம்பும்
எனினும்
பாறை இடுக்குகளில்
சிறகு தேய்ந்து
சிரமமின்றி அமர்ந்திருக்கக்
கற்றன
நினைவுகள்

அவரவர் கண்ணில்
ஆயிரம் காட்டி
அனாதையாய்
ஒடுங்கி மறையும்
அனுபவம்

வினாடியின் வாள்வீச்சில்
வெட்டுப்படும்
வாழ்க்கை

சாட்சியாய்ச்
சுற்றிலும்
நச்சு நச்சென்று பேசிப் புழங்குவர்
மனிதர்

உலாவி வருவன யாவும்
உண்மையல்ல என்று
மௌனம் சாதித்தோம்

எப்படியும்
கலங்கித் தெளிந்தபோது கண்டோம்
தெளிவும் ஒரு
கலங்கலேயாக

மாற்றல்

பின்னணி உண்டு

மாற்றிக் கொள்வோம்
உன்னுடையதை நான்
என்னுடையதை நீ

மாற்றிக் கொண்ட இடைப் பொழுது
பின்னணி இல்லாதது

இடைப் பொழுதுகளையும்
மாற்றிக் கொள்வோம்
உன்னுடையதை நான்
என்னுடையதை நீ

பின்னணிக்குத் தளங்கள் உண்டு
மாற்றிக் கொண்டபின்
மற்றிக் கொள்வோம்
தளங்களை

தளங்களில் நடமாட்டங்கள் உண்டு
மற்றிக் கொள்வோம்
நடமாட்டங்களை

நடமாட்டங்களில்
பின்னணி
சூழலாக
மாறியிருக்கக் கூடும்

சூழலில்
எனது உனது சாயைகள்
நிர்ணயம் நோக்கி
வீண் முயற்சிகளில்
அலைந்து திரியக் கூடும்
மாற்றிக் கொள்வோம்
சாயைகளை

எனது உனது இன்றி
எதாவதாகவோ
இருக்க நேரிடும்
மாற்றிக் கொள்வோம்
எதாவதுகளை
வேகம் வேகமாக

மாற்றல் நிரந்தரப் படுகிறதா
உடனே
மாற்றிக் கொள்வோம்
மாற்றல்களை