Saturday, November 24, 2007

குரல்கள்

தொலைதூரத்தில்
குரல்கள்.
தொடநீளும்
பிளந்த நாவுகள்போல்

எனினும்
எட்டாதிருக்கிறேன்

தூக்கம் கலைந்து
திடுக்கிட்டெழுந்து
உட்கார்ந்தால்
இரைச்சல்கள்
முட்டிமோதி வருவதெனக்
காணும்

விலக்கிவைத்தால்
விடுமா என்னா?

கசப்பு இனிப்பு வெறுப்பு விருப்பு
அன்பு....
நானேயிட்ட பெயர் சுமந்து
முத்தமிட்டு முத்தமிட்டு
என்னை உறிஞ்சியவை. .

விலக்கித் தனித்தபின்
வேஷம் வெளுத்து
கிழிக்கும் குரலாய்த்
தொடரும்.

சமயங்களில்
கனவின் நிலைப்படியிடிக்கப்
பொறிகலங்கி
வெளி நின்று
சுவர் நடுங்க
உறுமிப் போகும்

தூரம் கருக்கிப்
புகை ஏவி
சூழ நின்று சிரிக்கும்

என் தோட்டத்து
வாய்மூடி அரும்புகளைக்
குதறிப் போகும்

நாக்குத் தள்ளிய தலைகளை
மேய்த்துக் கொண்டே,
போகுமிடமெங்கும்
பின்தொடரும்

எட்டாதிருக்கிறேன்
எனினும்
குரல்கள்

இயக்கம்

அவன் ஒருநாள்
சொன்னான்:
'நீ
இயல்பில்
வடிவிலி

போக்குவரத்துத் தூசி
உன்னைப் பொருளாய்ச் சமைத்தது

சுத்தமான தூசி
கிரீடமாய்த் தலையேறிற்று

சுழன்று அலைபாயத் தெரிந்தவை
உள்ளே நுழைந்தன'

போக்குவரத்து
இல்லாதிருந்திருக்கலாம்.

யுரேகா

சுள்ளிக்காடு
கட்டெறும்புகளின் அணிவகுப்பின்முன்
விறைத்து நின்றேன்.

முறைத்தாய்

ஊர்க்குளம்.
பாசிவிலக்கி
நீரில்
என் முகம் கிடைத்த
பெருமை தாங்காமல்
புரண்டெழுந்தேன்

சுளித்தாய்

தரையும் சுவருமற்று வீடு
உள்ளே
காற்றில் திணிந்திருந்த
குரல் சேகரித்து
நாவில் தடவிப் பாடினேன்;
வாயருகே வந்து
பிணவாடை கண்டாலெனத்
துணுக்குற்றாய்

அன்றைக்கு
எல்லாம் துறந்து
ஆன்ம பரிசோதனைக்காக
அமர்ந்த தியானத்தில்
என் முதுகைக் குத்திற்று
உன்கண்

யுரேகா சொல்லித்
தட்டுத் தடுமாறி
ஓடிய போது
கைகொட்டிக் கைகொட்டிச்
சிரித்தாய்

யார் நீ

வியர்த்தம்

வெளியேற வழிதேடி
அலைவதிலும்
விளையுமொரு
வட்டம்

நம் முயற்சிகளின்
உள் ஆவி
கெஞ்சிக் கூடவே வந்து
வியர்த்த விளிம்புவரை
புலம்பிப் பார்த்து
முணுமுணுத்துப்
பிந்தங்கிப்
புள்ளியாய் மறையும்.

உளவாளிகள்

என் பிம்பங்களை
முறித்துக் குவித்துத்
தீமூட்டினாய்

மார்கழி கழிந்தது

பார்த்துக்கொண்டேயிரு

நானும் ஒருநாள்
என்னைத் திரட்டி
நின்று கொள்வேன்

ஈரவிரலை உரசி
ஈமத்தீ எழுப்புவேன்

சுற்றிலும்
முள்வேலி சலசலத்து நகர்ந்துவர
நானும்
முகம் இருட்டி
நடமாடுவேன்

என்
ஒரு பகுதிக்குக்
குரல்மாற்றம் தந்து
உன்னுடையதெனக்
கூவித்திரிவேன்

இன்னொருநாள்
என்னிடமிருந்தும்
தப்பி
உச்சியிலிருந்துகொண்டு
பார்ப்பேன்

இயக்கம் விலகி
நிமிஷங்கள் மட்டும் மொய்த்துக்
கிடக்கும் என் உருவங்களை
மிதித்தும்
தழுவியும்
கடித்தும்
முத்தமிட்டும்
நீ தேடித்திரிவதை
வேவு பார்ப்பேன்

வினை

விதைத்த வினை
விளைந்தது

விளைந்தவை உதிர்ந்து
மீண்டும் பெருகின
மீண்டும் பெருகின
மீண்டும். . .

வினை அறுப்போர்
எவருமில்லை
எங்கும் எங்கும் வினைமயம்

உலகெங்கும் நிறைத்தன
யுகங்களில் நிரம்பி வழிந்தன
அண்டம், தன்
தையல் பிரிந்து
அவதியுற்றது

இந்தப் பிரளயத்தில்
மிதந்தவர்களைப் பற்றி ஒரு
நிச்சயம் பிறந்தது

மூழ்கிக்
காணாமல் போனவர்கள்
கண்டுபிடிப்பார்கள்
என்றும்
வதந்தி பிறந்தது... ..

நிசப்தமும் மௌனமும்

நெடுங்கால நிசப்தம்
படீரென வெடித்துச் சிதறியது

கிளைகளில் உறங்கிய
புழுத்தின்னிப் பறவைகள்
அலறியடித்து
அகாத வெளிகளில்
பறந்தோடின
தத்தம் வறட்டு வார்த்தைகளை
அலகுகளால் கிழித்துக் கொண்டே
0

விடிவு
நினைவுகளையும்
நிறமழித்தது

'நெடுங்காலம்' கடுகாகிக்
காணாமல் போயிற்று

சுருதியின்
பரந்து விரிந்து விரவி...
இல்லாதிருக்கும் இருப்பு
புலப்பட்டது
மங்கலாக

சுருதி தோய்ந்து
வானும் நிறமற்று
ஆழ்ந்தது மெத்தென

பூமியில்
ஒலிகளின் உட்பரிவு
பால்பிடித்திருந்தது
வெண்பச்சையாய்

அந்தர நடை

வழியனுப்ப நீ
வந்தாலும்
வாசல் இருட்டில்
உன்முகம் தெரிவதில்லை

உன்
நிழல்குரலும்
வெறும் அசைவன்றி
வேறொன்றும் உணர்த்துவதில்லை

உன்
சூழல் அணுக்களோ
உருக்காட்டுமுன்
உருமாறும்
ஓயாமாறிகள்

பிரபஞ்சத் தூசிகளை
மூச்சிடை உள்ளிழுத்து
வெளியை
ஒரு சிரிப்பில் சுருட்டி விரிந்த
சூன்யத்தில்
நீ நான் நம்மிடை
விறைத்தோடிய மெல்லிய கோடு.

கணத்தின் சிறுதுகள்.

பிரமிப்பில்
பிரமிக்கவும் மறந்து
உன்னுடன் கைகோத்து
இடைக்கோட்டில்
அந்தர நடை பயின்றது

உண்மைதான்

எனினும்
நம்பச் செய்வது --
இல்லை --
நம்புவது எப்படி

Sunday, November 11, 2007

மாலை - ஊர்

வேட்டைக்குப் போனவர்கள்
திரும்பி வருகிறார்கள்

மான் முயல்கள் வேறேதோ பிராணிகளைச் சுமந்து --
விசுவாச வாலசைப்புகள் பின்தொடர,
தாரை தப்பட்டை முழங்க,
பந்தங்களின் வெளிச்சத்தில்
எவர் வெற்றியிலோ எவரெவர் சோர்வுகளோ
மழுங்கித் தெரிய.

0000

மாலை நேரம் சுறுசுறுப்படைகிறது
இருந்த இடத்திலேயே.
முடிவின்மையின் சேமிப்புக்கு
ஒரு புள்ளியைப் பிரித்துக் கொடுக்கிறது

0000

சிறுவர்கள் என்ற எங்களின்
விளையாட்டினுள் நுழைந்து
வியர்வையைச் சீண்டிய
விநோதக் கனவு மயம் .. .. ..

0000

இருள் பூசப்பூச
மரங்களும் கூரைகளும் குட்டிச்சுவர்களும்
முகங்களும் அவற்றின் உரையாடல்களும்
கனத்து
யுகாந்தரங்களின் ரகசியம் அழுந்தி
மயங்குகின்றன

ஊர் மேடிட்டுக் கொள்கிறது
யாதும் ஊர் ஆகிறது

பகல்வேனிலின் சீற்றம்
அலறிப் புடைத்த ஆவேசம்
மூலைகளை மோதி அசைத்த காற்று
யாவும் ஊர் ஆகின்றன

பொழுதின் நினைவும்
நினைவின் பொழுதும்
இடைச்சுவர் தகர்ந்து
ஒன்றினுள் ஒன்றாகி
ஊர் ஆகின்றன

பேசுவதற்கு என்ன இனி
தணிந்தடங்கிய யாவும் இதோ
ஊர் ஆகின்றன

உலக உருண்டை உருவிலகி
ஊர் ஆகிறது

ஊர்
தன் மிகச்சிறிய புள்ளியில்

In Progress ...

In Progress ...

எதன் முடிவிலும் . . .

நினைக்க நினைக்க
நா ஊறிற்று
பறிக்கப் போகையில்

ஓ, அதற்கே எவ்வளவு முயற்சி!
இரண்டு சிறகுகள்
இங்கே கொண்டுவந்துவிட,
யார்யாரோ கொடுத்த
கண்களைக்கொண்டு வழிதேடி,
இடையிடையே காணாமல்போய்,
என்னைநானே
கண்டுபிடித்துக் கொண்டு
கடைசியில்
மங்கலான ஒருவழியில்
நடந்தோ நீந்தியோ சென்று சேர்ந்து
முண்டுமுண்டாய்ச்
சுளுக்கிக்கொண்டு நிற்கும்
அந்த மரத்தில் என்னை ஏற்றி
அதை பறிக்கச் செய்து

ஏறிய நானும்
கீழ்நின்ற நானும்
நாவில் வைத்தபோது
குடலைக் கசக்கும் கசப்பு

கீழே எறிந்துவிட்டு
மறுபடி நினைத்தால்
நினைக்க நினைக்க
நா ஊறுகிறது.

ஏற்பாடு

நமக்குள்
ஒரு ஏற்பாடு

நான் நிகழ்கிறவன் இல்லை
என்பதால்
நிழலும் சுவடுமற்று
நின்றிருப்பேன்

நீ அபரிமித இயக்கத்தில்
கடையப்பட்டு
வேகத்தின் பூரணம் நிச்சலனம்
எனக் கண்டு
அதேபோல் நின்றிருப்பாய்

பாவனைகளில்
மிகமூத்த
நான் என்ற பாவனையை
மெல்ல முகர்ந்து
விரல் நுனியால்
தொட்டுப் பார்த்துக் கொண்டு
நான்

நான் என்ற பாவனைக்குள்
செறிவாய் நுழைந்து திணிந்து
பார்த்தலும் பார்க்கப் படுதலும் இல்லாமல்
நீ

என்னைத் தனக்கென்று கொள்ள
என்னிடம் எதுவும் பிறக்காமல்
பார்த்துக் கொண்டு
நான்

உன்னை உறிஞ்சிக் கொண்டு
உன்னிடம் சரணடைந்த
வெளியை
வெறித்துக்கொண்டு
நீ

நமக்குள்
இது ஒரு
ஏற்பாடு



உலா

நிழல்
தொட்டு எழுப்பிவிட்டுப்
போனது

ஒருநாளும்
படுக்கையில்
பின்னம் விடாமல்
வாரிச்சுருட்டி
முழுமையாய் எழுந்ததில்லை.
இன்றும் தான்.

வாடைக்காற்று
வழித்துப்போகும்
தேய்மானம்
பொருட்படுத்தாமல்
நடைபாதை நெருப்பு
தொற்றித் தொடர
ஊர்க்கோடி வரை
உலாவப் போகவேண்டும்

ஊர்க்கோடி
ஒருநாள் இருந்த இடத்தில்
இன்னொருநாள்
இருப்பதில்லை

போய்ச்சேரும்போது
பெரும்பாலும்
இருட்டிவிடும்

இருளின் பேச்சுமட்டும்
மயக்கமாய்
கனத்துக் கேட்கும்
அதில் மின்மினிகளின்
பாதையன்றி
வேறொன்றும் தெரியாது

திரும்பிப் பார்த்தால்
ஊர்
புகைவிட்டுக் கொண்டு
சின்னதாய்த் தெரியும்

என்
பிணங்கள் அங்கே
பொறுமையிழந்து
கூக்குரலிடுவது கேட்கும்...

திரும்பத்தான் வேண்டும்
மனசில்லாவிடினும்

திரும்பி,
கடைவாயில்
மரணம் அதுக்கி
மழுப்பிச் சிரித்து
உறங்கித் திரிய வேண்டும்
மறுபடி நிழல்வந்து
தொட்டு எழுப்பும் வரை