Sunday, December 30, 2007

காலம் -- வாசனை

சுத்தமாய் ஒருநாளை
ஒதுக்கி
நிறுத்திவைப்போம்
எதற்கென்றுமில்லாமல்

அது
பரபரப்பதும்
பரிதவிப்பதும்
பார்த்திருப்போம்

ஜரிகையில் எழுதிய
தன்பெயர்
அழிய அழிய
அது பொருமிப்
பெருமூச்சு விடக்கூடும்

தன் நீள்சதுர உருவம்
மங்கமங்க
நழுவப்
பெரிதும் துடிக்கலாம்

வானம் தொட்டு நிமிர்ந்தும்
மண்ணில் குறுகி நெளிந்தும்
தன் மின் சக்தியால்
எங்கும் துழாவக்கூடும்
ஒதுங்கி நிற்போம்

தன்னுள்
செறிந்து பறக்கும்
துகள்களுள்
பதுங்கி மறைந்துள்ள
சப்தங்களை வருடிச்
சரி பார்க்கலாம்

உலகின் முழுச்சாயையும்
தேமல்போல் படர்ந்து
தினவு தருவதை
உணர்ந்தோ உணராமலோ
தன்னைத் தேய்த்துவிட்டுக் கொள்ளலாம்

சிரித்துக் கண்ணீர் சிந்தித்
திமிறி
தப்ப முடியாதெனக் கண்டு
கடைசியில்
அது
வாய்திறந்து
பேசி,
பேச்சின் வாசனையில் கரைந்து
தப்பிவிடக் கூடும்

அதுவரை
சுத்தமாய் ஒரு நாளை
ஒதுக்கி
நிறுத்திவைப்போம்
எதற்கென்றுமில்லாமல்

காலம் -- சிறை

பிரக்ஞையின்
அறாவிழிப்பு

இரவிலி நெடுயுகம்
இடந்தொலைத்த ஆழ்வெளி

சிறையிருப்பது
காலமும்தான்

காலம் -- கறுப்புச் சூரியன்

இந்த
ஒளியின் பயங்கரத்தில்
வழிகண்டு போக
கண்மறைத்துப் போக
ஒரு கறுப்புச் சூரியன்
உண்டு
ஒவ்வொருவரிடமும்

காலம் -- புழுதி

எங்கிலும் புழுதி
வாழ்க்கையின் தடங்களை
வாங்கியும் அழித்தும்
வடிவு மாற்றியும்
நேற்று நேற்றென நெரியும் புழுதி

தூரத்துப் பனிமலையும்
நெருங்கியபின் சுடுகல்லாகும்
கடந்தாலோ
ரத்தம் சவமாகிக் கரைந்த
செம்புழுதி

புழுதி அள்ளித்
தூற்றினேன்

கண்ணில் விழுந்து
உறுத்தின
நிமிஷம் நாறும் நாள்கள்

காலம் -- எல்லாம்தான்

எல்லாம்தான்
ஈரம் உள்வாங்கிப்
பழுத்து மினுமினுக்கும்

உடனே
சதைவற்றி
இசைத்தட்டுக் கோடுபோன்ற
ரேகை நெரிசலில் சலித்து
உட்கார்ந்து விடும்

உடனே
புதிதாகக் கண்திறப்பவற்றில்
தம்மை
ஒற்றிக் கொடுத்து அனுப்பும்

எல்லாம்தான்

காலம் -- மறுபடி

யார்சொன்னது
அந்த நாட்கள் போயினவென்று

தொற்றிய முள்ளையும்
பூவிதழ்களையும்
தோலுக்குள் மறைத்து
இந்த
ஒற்றையடிப் பாதையில்
மறுபடி வரும்
புதிது போல

காலம் -- நீச்சல்

குறுக்கும் நெடுக்குமாய்
நீந்தலாம்

முடிவில்லாதது
ஆழமு மாகாது
அதனால்
திரும்ப வராமல்
ஆழவும் செய்யலாம்

அப்புறம்
எப்போதாவது
வெள்ளைவயிறு காட்டி
மிதக்கலாம்

வேறென்ன செய்ய

காலம் -- சுள்ளி

காடு முழுதும்
சுற்றினேன்

பழைய
சுள்ளிகள் கிடைத்தன

நெருப்பிலிட்டபோது
ஒவ்வொன்றாய்ப்
பேசி வெடித்துப்
பேசின

குரலில்
நாளைச்சுருதி
தெரிந்தது

அணைத்து,
கரித்தழும்பு ஆற்றி
நீரிலிட்டபோது
கூசி முளைத்துக்
கூசின இலைகள்

தளிர் நரம்பு
நேற்றினுள் ஓடி
நெளிந்து மறைந்தது

சித்திர கூடம்

கதவு திறந்து
உள் நோக்கினேன்

சித்திரங்கள்
ஒன்றனுள் ஒன்று
நகங்களால் கிறுக்கின

கதவை
இறுகப் பற்றி நின்றேன்

பேச்சுக்கள்
நொறுங்கிப்
பரற்குவியல்

பூரணத்துவத்தைத்
தோண்டியெடுக்க
வெட்டிய பள்ளங்கள்
எங்கும்

சித்திரங்களின் சிரிப்பு
சிரிப்பு
சிவந்து கனலும் அலறல்

தம் ஒலங்களில்
தம் நிறம் முழுவதும்
கரைத்துப் பாய்ச்சும்

ஆயிரம் வருஷங்களைச்
சாலையாய் நீட்டச் சொல்லி
ஓரடி வைத்தவுடன்
உடல் தெறித்து விழும்

'சூரியன் உறங்கிற்றோ?'
கிள்ளிப் பார்க்கும்

சூரியன் உதிர்த்த ப்ரக்ஞை
கணங்களாய் ஊரும்
நாற்புறமும்

உருவம் வேண்டி
கணங்களிடம் இரக்கும்
ஓவியங்கள்

சூழவும் உரசி உரசிக்
காற்றைச் சிராய்த்துப்
புண்ணாக்கும் சில ...

ஒத்தி ஒத்திக்
கண்ணீர் தடவி
ஆற்றவரும்
சில ..

மூலவெறி சுமந்து
நரம்பு விறைத்தெழச்
சுவர்களைச் சுரண்டிச்
சதைமணக்க
மூச்சயிர்க்கும்
சில ...

குருட்டு வெளிச்சத்தில் கூசிக்
கண்மூடிக் கொண்டு
உள்கதவை நோக்கி
விரல் சுட்டி

நம்பிக்கையோடு
அமர்ந்திருக்கும்
மிகச்சில

              0

எல்லாம்
நெரிசலில்
நெரிசலை
மறந்து போகும்

அனுபவங்களைத்
தமதாக்க
ஒன்றையொன்று
தழுவிச்
சண்டையிடும்

சண்டை
சப்தங்கள் கீறிய வடு
உயிர்த்து அலறச்
சண்டை

பின்
தம் எல்லையின்மையில்
கொளுத்தி
ஒன்றன்மேலொன்று
பந்தங்கள்
எறிந்து விளையாடும்

அவற்றின்
பேதைக் குழந்தைகளோ
உப்புப் பனிச்சில் எறிந்து
விளையாடும்

              0

உள்ளே இன்னும்
எட்டி நோக்கினேன்

கூடவே பிறந்த
வினாக்களை
முதுகில் சுமந்து
வாயோரம்
சூன்யம் நுரைக்கும்
எல்லாம்

              0

நோக்கினேன்

மூலைகள் வெடித்துப் பெருகி
இன்னும் இன்னும் மூலைகள்

மூலைகளில்
ஒன்றன் நிழலை
ஒன்று உடுத்துக் கொண்டு
தம்மை விரித்துப்
படுத்துக் கொள்ளும்

அங்கங்கே
மறதி வாய்பிளக்கும்
உள்ளிருந்து
மரணம் தன்
கொடுக்கால் குறிபார்க்கும்

குருட்டு வெளிச்சம் எட்டாமல்
உள்ளின் உள்ளிருந்த
அவன்
தன் மௌன வெளியை
விலக்கிப் பிரித்து
ஒருகணம்
நோக்கினான்

முறுவலிட்டு
மௌன வெளியால்
மூடிக்கொண்டு
மீண்டும்
உள் மறைந்தான்

நான்
கதவைச் சாத்தி
வெளியேறினேன்

அதுதான் சரி

எல்லாம் தெரிவதும்
ஏதும் அறியாததும்
ஒன்றேதானென்று
தெருவிலொரு பேச்சு
காதில் விழுந்ததது

ஏதும் அறியாமல்
இருப்பதுவே சரி
என்று தோன்றிற்று

இருந்தால்
இருப்பதை அறியாமல்
இருப்பது
எப்படி

அதனால்
இல்லாதிருப்பதே
சரியென்று பட்டது

இல்லாதிருந்தால்
ஒருவசதி
தெருப்பக்கம்
போகவேண்டியதில்லை
இல்லாதிருப்பதும்
இருப்பதும் ஒன்றே
என்றொரு பேச்சைக்
கேட்டுக் குழம்பும்
குழப்பம் இல்லை.

Monday, December 24, 2007

ஓய்வு

நெருப்பு ஒருநாள்
செத்துப் போனது

சூரியனை உதைத்து
விலகிப் போயின
அண்டஞ் சுற்றிகள்

உறைந்தப்பிய இருளில்
குளிர்ந்து
மடிந்து
ஒய்வுகொள்ள வெறிகொண்டன

இடம்வழி பொழுது
தேடி அலைந்தன

அலைச்சலில் உழன்று
புது அலுப்புற்றன

'ஒய்வினும் பெரிய
உளைச்சல் எது'
'உளைச்சல் இல்லாதது
என்ன உண்டு'

கூடின பேசின
பேசின பிரிந்தன கூடின

ஒய்வுக்காக
ஒய்வற்று முயன்றன

முயலும்போதே
உள்ளே

திருட்டு ஆசை
முளைவிட்டது

'சூரியன் மறுபடி
விழிக்காதா'

உடனாளிகள்

வருத்தம் என்ன
இதில்

வாழ்க்கையின்
'பச்சை வாசனை'
தவறிப் போகலாம்

சுற்றிலும் பெருகி
நுரைத்துத் ததும்பும்
குரல்களில்
- நான் நீக்களில்-
காகித ஓடம் விடும் விளையாட்டு
நின்று போகலாம்

ஒரு நாள்
சப்பாட்டு வேளை
தவறிப் போகலாம்

போகட்டுமே

சோதனைக் குழாயில்
மிச்சமிருக்கும்
நம் உடனாளிகளுடன்
பேசப்போகலாம்
வா

உள்பாடு

இந்தப் பழக்கம்
விட்டுவிடு

எங்காயினும்
வானிலேனும் மண்ணிலேனும்
புள்ளியொன்று கிடக்கக் கண்டால்
சுற்றிச் சுற்றி
வட்டங்கள் வரைவதும்
சுழன்று சுழன்று
கோலங்கள் வரைவதும்

குறுக்கும் நெடுக்குமாய்ப்
புள்ளியின் வழியே
பரபரத்துத் திரிவதும் --

இந்தப் பழக்கம் விட்டுவிடு

முடிந்தால்
புள்ளியைத் தொட்டுத்தடவி
அதன் மூடிதிறந்து
உள் நுழைந்து

விடு

வெளிப்பாடு

நீரூற்றிச் சலித்தது
கை

தன்னைக் கீறி
வெளிவளர்ந்த
விதையை
வியந்து நோக்கிற்று
மண்

விதைபருத்து
பிரம்மாண்டமாய்த்
தன்னை விழுங்குவது கண்டு
விதிர்த்தது வெளி

மரமாய்க் கிளையாய் விழுதாய்
அன்றி
'வெறும் விதையாகவே'
வளர்கிறது
இன்னும் இன்னும்

ஒட்டி நின்றேன்
உள்ளே அடர்த்தியாய்ப் பேச்சுக்குரல்

மாப்பிள்ளைகள்

உள்ளே வா
குளிரா நடுக்கமேன்

நிமிர் குனி
சிரி
நட ஆடு பாடு பேசு

இன்னும் கொஞ்சம் சிவப்பாய்
இன்னும் கொஞ்சம் துடிப்பாய்
ஆமாம், இன்னும் கொஞ்சம் மணமாய்
இருந்திருக்கலாம்

பார்வைக் கூர்மை
இன்னும் கொஞ்சம்
இருந்திருக்கலாம்

இன்னும் ...
இன்னும் ...

சரி, பரம்பரைச் சொத்தென்ன
உன் சொத்து எவ்வளவு

சமயத்தில்
சஞ்சீவிமலை சுமப்பாயா

ஊஹூம் போதாது
போதாது போபோ

பாவம் வார்த்தைகள்
மலடு வழியும் முகத்தோடு
வெளியேறும்

வெளியேற்றத் திறந்த
கதவிடுக்கு வழியே
முட்டிமோதிப் பீறிடும்
கன்னி மனம்.

வலி

தார் இளகிப்
புகை நெளிந்தது

புதைந்து மறைந்ததுடல்

இரவுதான்

மூட்டுக்களுள்
இடைவிடாது துருவிக்குடையும்
பிசிறு பிசிறான அலறல்
சுவர்க்கோழி?

கிசுகிசுக்கும் வெளிச்சத்தைக்
கலக்கி
இருட்டிவிட்டு
வரும் சலனம் - - தூரத்துக்குரைப்பு,
முதுகுத் தண்டில்
பல்தீட்டும்
ஓநாய்க்கு வந்த
கேள்வியா பதிலா?

மூளைப் புதரிலிருந்து
சீறிச் செல்லும் பாம்புகளை
மூலை முடுக்குகளில்
மறைந்திருந்து
குத்திச் சுருட்டுகின்றன
வேட்டைக் கரங்கள்

குறுகிய தெருக்களில்
ரத்தத்தின் சங்கீதத்தை
வெட்டி, நசித்து
ஓடுகின்றன,
மூட்டைக்கனம் தாங்கும்
திருட்டுக் கால்கள்

நிசப்தத்தின்
சவ்வு கிழித்துப் பாய்ந்த
தோட்டாத் துளைகள்.
துளைகள் வழி வழிவது
நசுங்கிய கண்களின்
புலம்பல்

வலி
வலி
வலி

வலி

அடையாளம்

எங்கெல்லாமோ
தேடினாய்

நான்கு அடிவானங்களிலிருந்து
பூமியை வலைசுருட்டி
மடியில் கொட்டி ஆராய்ந்து

கொம்பு நுனிமுதல்
வால் நுனி வரை
அலசிப் பாய்ந்து

பல்லில் நகத்தில் பதுங்கியிருந்து

சதைகளைப் பிளந்து பிளந்து

இருளைக் கடித்துச்
சுவைத்துத் துப்பி

எங்கெல்லாமோ
தேடினாய்

என்னுள்
புதர்விலக்கித் துருவிக்
கண்டுபிடித்ததென்ன, உன்
சிதறல்களேயன்றி

கிடைத்தேனா
ஏது .. .. எனக்கு
அடையாளம் ஏது

சூழ்வெளியின் உளறல்கள்
என் கண்ணில்
கீறியதுதான்
என்னிடம் உண்டு
அடையாளம் ஏது

நம் கரைசலில் நீ
மீட்ட என் நிழல்களும் கூட
சிரிப்போடு
ஆவியாகிப் போயின

0

கிடைத்தேனா

நிறுத்துங்கள்

பிடியுங்கள் குழந்தையை

சூழவும்
ரத்தப்புரி சுற்றிய
பிரசவ வேதனையையும் சேர்த்தே
பிடியுங்கள் இவனை

நம் அடையாளம்
நம்மிடம் ஏது

இருத்தலில் நடத்தல்

நடக்கும்போதே ஒரே நொடியில்
ஒரு கோடாய் மாறித்
தெருவில் நடப்பது

பேச்சுக் குரல்களின்
மடியில் பதுங்கி
அவை உறங்கினபின்
பசியுடன் வெளியேறுவது

பரவிப்பெருகிய பகலில்
கூடிப்பேசி மோதும்
இமைகளின் இடையே
நறநறத்து அறைபடுவது --

இவை வருத்தம்தான் எனிலும்
பெரிய வருத்தம்:
போகும் வழியெங்கும்
சுருண்டு கீறலுற்ற
கிறுக்கல்களுக்கிடையிருந்து
முகம் நிமிர்த்தித்
திருப்திப்புன்னகை தெரிவிக்கும்
பாமரனைச்
சந்திக்க நேர்வது

இடம் ஒழித்து வைத்துப்
பெயர் சொல்லிக் கூப்பிட்டதும்
தொலைதூரத்து மலையிடுக்கில்
தீபம் அசைத்து மறையும்
உருவிலிகள்
ஒன்றுகூடப்
பிடிபடாமல் போவது

இப்படியாயிற்றே என்று ஓடிக்
காற்றில் கரைந்துவிட முனைந்தால்
காற்றும் சதைபூசி
வண்ணம் போர்த்து
செருப்புக்கு ஆணிதேடி
அலைவது

கீழ்க்கல்லும் மேற்கல்லும் உரசிப்
பொறிசெய்து என்
திரிகொளுத்தி வலம்வருகையில்
கர்ப்பகாலத்திலேயே
என் வயிற்றுள்ளிருந்த
இருட்டுப் பிசாசு
அலறுவது

புள்ளி

வாய் பிளந்து
காலத்தின் இடைத்திட்டில்
காத்திருந்தது
ஒரு புள்ளி

சுற்றிலும்
சீறி மின்னிச் சென்ற
அணுத்துகளில்
ஒன்று
சட்டென நின்றது

புள்ளியுள் நுழைந்தது

கறுத்துமேலும்
சிறுத்துச் சுழன்றது
கனத்த புள்ளி

சப்த வியாபகத்தில்
ஆணியால் கிறுக்கிய
வெளுத்த சித்திரங்கள்
சுற்றிலும் மிதந்தோட,

இடைத்தட்டில்
காத்திருக்கிறது
கனத்த புள்ளி

காத்திருக்கிறது
தூரிகையின் ஒரு
நார் நுனி தேடி

இமை

செத்துப்போனது போலிருந்த
இமை
மெல்ல
மெல்ல
உயிர்த்து, மேலிருந்து
அசையப் பார்க்கிறது

வறட்சி

பார்வையில்
சூரியப் பொருக்கு உதிர்ந்து
வலியில் ஊறிக்
குவியல் சுற்றிலும்

கயிறுதின்று மிஞ்சிய
முளைகள்
உமிழ்நீரில்
மீண்டும் தளிர்க்க
வெறிகொள்கின்றன

வர்ணங்கள்
பற்றிக் கொண்டு
வெறும் கரும்புகையுடன்
எரிகின்றன

மூலை இருள்தோறும்
சலனங்கள் சந்தித்து
அவசரமாய்ப்
பேசிப்பிரியும்

நினைவுகள்
ஏதோ ஒளிவலைப்பட்டு
ரத்தமும் வேர்வையுமாய்க்
கண்ணில் பரபரத்தவை,

இன்று, கண்சலிக்கவும்,
தம்மைச் சந்தேகித்து

புறம் பிளந்து புரண்டு சுழன்று
அகம் வெளியாய்ப் புறம் உள்ளாய்
ஆகியும்

எதும் புரியாது, தம்
மையத்துள்
சருகி ஒடுங்குகின்றன

நினைவின்மை 2

புதருக்கு
நெருப்புவைத்து
ஒதுங்கிக் கொண்டேன்

நெருப்பைத்தன்
வேரில் கட்டிப் போட்டுச்
சிரித்தது புதர்

வெட்டிச் சாய்ப்போமென
முயன்றபோது
அரிவாள் கூரில்
முசுமுசுவென வளர்ந்தது

நடுவே அமர்ந்து
கண்மூடி நான்
வெட்ட வெளியைச்
சுற்றிலும் விரித்துக்கொள்ள, என்
புற இமை தடவி
அனுதாபமாய்க் கவனித்தது
புதர்

பேசாமலிருந்து விட்டேன்
பெருந்தன்மையாய்

சமையல்

என்
புகைக்கூண்டின் வழியே
என் சதைக்கருகலை
மோப்பம் கொண்டு
விருந்தெனக் கூச்சலிட்டு
உள் நுழைந்தன,
தம் அலகுகளைத் தின்றுதீர்த்த
அராஜகப் பசிகள்

நான் என்
உள் பின்னல்களுக்குள்
பதுங்கிச் சுருண்டேன்

தோட்டாக்கள்
புதைந்து மக்கிய
தழும்புகளை நக்கிக்கொண்டன
என் வயிறு
நிரம்பி வலித்தது

ஆகாசவலையை
அரித்துத் தின்றும்
அடங்காமல்
கண்சிவந்து
ரத்தம் பதறித்
தம்மேல் படரும்
வெளிச்சத்தைத்
தேய்த்து உருட்டித்
தின்றன

0 0 0

என் பொம்மைவீட்டின்
சகாக்களுக்கு
இன்று சமையல் இல்லை
என்று சொல்லிவிடலாம்

0 0 0

ஒருவகையில்
சற்றுச் சதைகருகியது
நல்லதே ஆயிற்று

'இருந்ததும்
இருந்ததுள் நுழைந்ததும்
நான்' --
சூசகம்
மின்னோடிற்று
'வெளியுமில்லை உள்ளுமில்லை'

0 0 0

இனி
பொம்மை வீட்டின்
சகாக்களுக்கு
என்றுமே சமையல் இல்லை

பிரிவினை

வார்த்தைகள்
பிறந்த மேனியிலேயே
பிரிந்து தொடர்பற்று
எங்கேனுமொரு
அனாதை ஆசிரமத்தின்
சவ்வுக்கதவு தட்டும்

கால்கள்
திடுமென விழித்துக்கொள்ளும்;
அடிவான் மறைந்து
அங்கே
காரியம் கவிழ்ந்து
காரணத்தைக் கூடிக் கலந்து
இரண்டும் ஆவியாகித் தொலைவது
கண்டு
திடுக்கிடும்;
சுற்றிச் சூழ்ந்த
நார்க்காட்டிடையே
இரண்டு நாக்குகளையும்
உதறி எறிந்துவிட்டுப்
படுத்துக்கொள்ளும்
தம் அடையாளம் மறந்து

கடித்துக் கவ்விய காம்புகளுடன்
கடைவாயில்
பால்கலந்து ரத்தம் வழிய
கன்றுகள்.

கன்றுகள்
பிரளயமாய்க் குரலுடன்
இருளுடன்.
தாயாக உன்மனம்
தனிக்கும்

இருந்தும் எப்படியோ
உருவம் சுமந்து
இடந்தோறும்
கணந்தோறும்
நிறுத்திவைத்து

மேலும் மேலும்
உருவம் சுமந்து
போகிறாய்

உன்னைப் பிரிந்து விலக்கிக்கொண்டே
உன்னைத்தேடி
உன் தவம் மட்டும் உடன்வரப்
போகிறாய்

உன் வற்றலிலிருந்து
கெட்டியாய்ச் சொட்டிவிடும்
காலத்தின்
கடைசிச் சொட்டு

கணம் உலரும் அக்கணம் - -
கண்ணில் ஒரு படலம் கிழிய
வாலைச் சுழற்றி
ஆங்காரமாய் அடித்துவிட்டுப்
புற்றுக்குள் விரையும்
பெயர் உரித்த
ஒரு பசி

நீ உன் தவமும் கலைவாய்

Saturday, December 1, 2007

வயது

ஒருநாள்
தரை காணாமல் போனபோது --
சுருங்கி வற்றிச் சுண்டிக்
காணாமல் போன போது --

பின் வாங்கிப் போகுமுன்
திசைகள் துப்பிப்போன
சூன்யம்
என்னை அப்பிக்கொண்ட போது --

ஒரு மாதிரியாய்த் திரிந்தேன்

பெரிய முதுகு வளைத்து
வியர்த்த தலைகுனிந்து
உரத்த குரல்போல யாரோ
பார்த்தார் என்னை

சிரித்தார் நீலம் பீறிட

'ஒஹோ
தப்பிப்
பின்னோடப் பார்க்கிறாயோ?
பிரிந்து கழன்று
விரைந்தது நீயன்றோ
எனினும்
நீ நீத்துவந்த வயதுகள்
வினாடிகள் மொய்த்து --
விட்ட இடத்தில்தான் மிதக்கும்
போய்க் கூடிக்கொள்'

திரிந்தபோது கண்டேன்
வெயிலுறிஞ்சி வெளுத்த தெரு;
வாசற்படியில்
வாயில் விரலுடன்
நின்றது குழந்தை
வீடும் வாய்திறந்து
குழந்தையை விரலாய்ச்
சப்பி நின்றது .. .. ..

கண்களை மூடிக் கொண்டேன்
மூடிய இமைகளுள்
முலைக்காம்பின் உறுத்தல்

இன்னும் அவர்
நரைத்த தலைகுனிந்து
நீலம் பீறிடச் சிரித்தார்

பார்த்தால் --
அவர் முகரேகைப் பின்னல்
குழந்தையின்
கண்ணில் நெளிந்தது

கிலுகிலுப்பை

கிலுகிலுப்பை.
பழுப்பேறிய வெளிச்சத்தைப்
போட்டுக் குலுக்கி

முகமெல்லாம் மணக்க மணக்க
கண்ணெல்லாம் இனிக்க இனிக்க
ஆடுவேன் ஆடினேன்
கிலுகிலுப்பை

சப்தம்
வழுவழுத்துப்
பிதுங்கி வழிந்து
சளியோடையாய்
நகர்ந்து நுழைந்தது

விளையாட்டு
திருகி முறுக்கிற்று
விடவில்லை
குழந்தை
நான்

சப்தம் சளியோடை
நகர்ந்து உள்நுழைந்து
பரபரத்தது

உள் எங்கும்
கதிர்கள் நனைந்து
நுனிமழுங்கிச் சுருண்டன

ஆடினேன் கிலுகிலுப்பை

சூழ்ந்து செறிந்திருக்கும்
தன் அணுக்களின்
முகச்சோர்வு சகியாது
அவன் வெளிவந்தான்

'சீ
என்ன செய்கிறாய்
நான் துயில் எழவில்லை
உறக்கம் கலைந்தேன்'
என்றான்

கிலுகிலுப்பையைத் தூர எறிந்தேன்
பரல்கள் தம் பெயர்சொல்லித் தெறித்தன

'ஹிரோஷிமா'
'ஹரேராம ஹரேகிருஷ்ணா'

          0

இன்னும்
ஒரு விளையாட்டைத் தேடி
வியர்க்கிறேன்

மருந்து

அசட்டு ஒளி
பிஞ்சில் வெம்பிய தன் நிறங்களைப்
பிதுக்கிப் பார்த்துச்
சிரித்திருந்தது

மண்ணில் மூழ்குதல்
உறிஞ்சு பாறைகளிடை
உரமிழத்தலே
என்று
வாடிக்கையாயிற்று

நின்ற இடத்தில்
நின்று கொண்டே
ஓயாத பயணம்
அபத்த மென்பதில்
சிரிப்பும் மூண்டது

பின்
சட்டென்று ஒருநாள்
என்னையறியாமலே
இதனிடம் ஒப்புவித்தேன்
என்னை

இளம் சூடு

கண்முன்
தொனிகளின்
மயக்கு வடிவங்கள்

சுற்றிலும்
நூறுவருஷ நீளத்துக்கு
இதன்
ஸ்பரிச சுகத்தில்
அரூபமுற்ற
சுருதி

மூச்சடக்கி ஸ்தம்பித்த
வினாடி நுனியில்
திசையற்று நீண்ட கரங்களில்
நான்

புலன் பூட்டுடைத்து
மிருது மூர்க்கமாய்
உள்நுழைந்து
உருவம் உருவிச்
சுருட்டி எறிந்துவிட்டு

என்னைத்
தன்மேலொரு
படலமாக்கிப்
படர்த்திற்று
மெளனம்

காற்று

அலைகளைச்
சிக்கின்றி வாரிய காற்று
கரைமீது
என்னை விசாரித்தது

வெறிப்பு மாறாமலே
சூரியனைக் கைகாட்டினேன்

நீலத் தகிப்புடன்
கண்சிமிட்டி
என்மேல் ஊசிகள் எய்தான்

தரையாய்
அகன்று விரிந்து படுத்துப்
புரண்டு
உருத்தெரியாமல்
காற்றை நசுக்கினேன்

ஓ ஒ ஒ ஒ வென்ற
அலையிரைச்சல் பாய்ந்து
என்னுள்
கற்கள் நீர்த்துப்
புகைந்தன

0

யாருக்கும் நான் சொல்வது:
'பாம்பை முழுங்கினால்
பெருமூச்சு விடவும்
படம் விரிக்கவும்
சட்டை உரிக்கவும்
மறுபடி பாம்பை
முழுங்கவும்
தெரிந்து கொள்வாய்'

0

ஒருநாள்
கூந்தல் இழைகளிடை
காற்று
பிணங்களை
இழுத்துக்கொண்டோடியது

வியர்வை புலர்ந்த
புறங்கழுத்தின் உப்பைத்
துண்டால் துடைத்தேன்

பசி

முத்தங்கள் கரைந்தன

எதிர்துருவ இருள்
தலையேதுமின்றி
உடலே கூவலாய்
அழைத்தது

         0

உன்னுள்
புகை சுருண்ட மயக்கு

என் நாவுகள்
கசப்புச் சுட்டுத் திரும்பின

முன்பு
என் தனியெல்லைக் கற்கள் இருந்த
குழிகளில்
அவற்றின் விசுவாசங்கள்
அசைந்து
கிசுகிசுப்பதைத்
திடீரெனக் காண்கிறேன்

இந்த என் புழுக்கம்
கனத்துக் கனத்து
எந்த வினாடியின் அலகுநுனிக்குக்
காத்திருக்கிறதோ

வெடிக்கும் சிதறலில்
உன் ஸ்பரிசக் குளறல்கள்
இருந்தால்
கண்டுகொள் -- மீட்டுக்கொள்

இவை
தம் இருப்பின்
அவஸ்தை தாங்காமலே
மோகம் கருகிய பாலையில்
கண்ணீர்தேடி
அலைகின்றவை

நம்மைச் சுற்றிப் போர்த்திய
காற்றின்
கந்தல்
இதோ காலடியில்
கறையானை எதிர்நோக்கி

வெள்ளம்தான் (நாம் யாவரும்)
ஒவ்வொரு துளியிடையிலும்
கண்படாததொரு சவ்வு

         0

எனினும் இதோ --
பசி
பசி

சட்டையுரித்துப்
பளபளத்துத் திரியுமதன்
நிழல்
நம் இருளுக்குள்
சரசரக்கிறது

வாவா .. .. ..

வளர்ந்து வளர்ந்து
அடிவான விளிம்பில் போய்
வழியும் உன் கூந்தலை
அள்ளிக் கொண்டு

வாவா .. .. ..

வெளியே

ஆயினும் இன்றுகாலை
விடிவெளிச்சத்தில்
உள்ளே பார்த்தேன்

அணைத்துத்திணறிப்பின்
ஒன்றையொன்று
கருக்கிக்கொண்ட
இரு மூச்சுகள்;

ஒன்றையொன்று
குத்திக் கோத்த
இரு பார்வைகள்;

கண்ணாடித்தூள் பாதையில்
முனகிக் கிடக்கும்
நான்கு காலடிச் சுவடுகள்;

வெளியேற வழியின்றித்
தவித்திருந்தன

உள்ளே

இப்படித்தான்
சிலசமயம்

சுவர்விலகி வழிவிடினும்
கதவு விலகாது

புழுங்கிய சூன்யத்தைச்
சமாதானம் கொள்ள
ஒன்றிரண்டு கிளிக்குரல் நுழைவதென்றால் ...
சேமிப்பிலிருந்து
சிலவரிகள்
ஊர்ந்து நெளிந்து
இடுக்கின் வழி நுழைவதென்றால் --
இருமிக் கண்பிதுங்கியொரு
வைத்திய நண்பன்
தள்ளாடி நுழைவதென்றால் - -

முடியாது

நினைவின்மை 1

கொஞ்ச நாளாய்
நார்க்காட்டில் அடிக்கடி
சிக்கிக் கொள்கிறேன்

என்ன தடவியும்
முள் அகப்படாது

எங்கிருந்தோ தகிக்கும்
நெருப்பின் திசை
தெரியாது

குதறும்
சப்தத்தின் ஆவேசம்
வெளிக்கோடு உணர்த்தாது

சலிக்கச் சலிக்கப்
படலங்கள் புரட்டிக்
காற்றின் விளிம்பு
கண்வரை வந்து உறுத்தும்

சே என்ன இந்த
நச்சரிப்புகள்

நின்று
தடவிக்
கண்மூடி
கோடிகோடியாய்ப் பிரியும்
நார்களை
மீட்ட, மீட்டலில்
எழுந்து மொலுமொலுக்கும்
விரியன் குட்டிகள்

காட்டையே
நூலுருண்டையாய்ச் சுருட்டி
எறிந்துவிட்டால்
நிற்பது நடப்பது
தேடுவது காண்பது
இல்லைதான்
0
சலசலப்புகள்
ஒழிந்தபின்
சங்கீதக் கச்சேரி
கேட்கலாம்தான்
0
எறிந்தாலும்
இந்த வினாடிவரை
எழுந்து மொலுமொலுத்துக்
கால்சுற்றி என்
தோலாகிவிட்ட
இவைகளை
உதறுவதெப்படி


எப்படி

குருட்டுச் சந்து

குருடாய் முடிவுற்றது சந்து
அசடு வழிந்து திரும்பினேன்

பம்பரம் சுழற்றும் பையன்கள்
சிரித்தார்கள் லேசாக

அருகில் ஏதோ வீட்டில்
தந்தியைப் பிரிந்து
கூர்ந்து கூர்ந்து போய்
ஊசிமுனைப் புள்ளியுள் இறங்கி
நீடிப்பில் நிலைத்தது
கமகம்

உடல் உளைந்து
பெருமூச்சு விட்டபின்
தோன்றியது:
'ரத்தம் எப்போதும்
குருட்டுச் சந்தில் சுமையிறக்கித்
திரும்ப வேண்டியதே'

கோலங்களை மிதிக்காதிருக்கக் குனிந்து
தோரணப் பச்சை
கடைக்கண்ணில்
சந்தேகமாய்ப்பட நடந்து
சாலையை அடைந்தேன்

எதிரே
அடர்த்தியாய் மினுமினுப்பாய்
ஒரு கல்யாண ஊர்வலம்,
வானம் கவனிக்க

Saturday, November 24, 2007

குரல்கள்

தொலைதூரத்தில்
குரல்கள்.
தொடநீளும்
பிளந்த நாவுகள்போல்

எனினும்
எட்டாதிருக்கிறேன்

தூக்கம் கலைந்து
திடுக்கிட்டெழுந்து
உட்கார்ந்தால்
இரைச்சல்கள்
முட்டிமோதி வருவதெனக்
காணும்

விலக்கிவைத்தால்
விடுமா என்னா?

கசப்பு இனிப்பு வெறுப்பு விருப்பு
அன்பு....
நானேயிட்ட பெயர் சுமந்து
முத்தமிட்டு முத்தமிட்டு
என்னை உறிஞ்சியவை. .

விலக்கித் தனித்தபின்
வேஷம் வெளுத்து
கிழிக்கும் குரலாய்த்
தொடரும்.

சமயங்களில்
கனவின் நிலைப்படியிடிக்கப்
பொறிகலங்கி
வெளி நின்று
சுவர் நடுங்க
உறுமிப் போகும்

தூரம் கருக்கிப்
புகை ஏவி
சூழ நின்று சிரிக்கும்

என் தோட்டத்து
வாய்மூடி அரும்புகளைக்
குதறிப் போகும்

நாக்குத் தள்ளிய தலைகளை
மேய்த்துக் கொண்டே,
போகுமிடமெங்கும்
பின்தொடரும்

எட்டாதிருக்கிறேன்
எனினும்
குரல்கள்

இயக்கம்

அவன் ஒருநாள்
சொன்னான்:
'நீ
இயல்பில்
வடிவிலி

போக்குவரத்துத் தூசி
உன்னைப் பொருளாய்ச் சமைத்தது

சுத்தமான தூசி
கிரீடமாய்த் தலையேறிற்று

சுழன்று அலைபாயத் தெரிந்தவை
உள்ளே நுழைந்தன'

போக்குவரத்து
இல்லாதிருந்திருக்கலாம்.

யுரேகா

சுள்ளிக்காடு
கட்டெறும்புகளின் அணிவகுப்பின்முன்
விறைத்து நின்றேன்.

முறைத்தாய்

ஊர்க்குளம்.
பாசிவிலக்கி
நீரில்
என் முகம் கிடைத்த
பெருமை தாங்காமல்
புரண்டெழுந்தேன்

சுளித்தாய்

தரையும் சுவருமற்று வீடு
உள்ளே
காற்றில் திணிந்திருந்த
குரல் சேகரித்து
நாவில் தடவிப் பாடினேன்;
வாயருகே வந்து
பிணவாடை கண்டாலெனத்
துணுக்குற்றாய்

அன்றைக்கு
எல்லாம் துறந்து
ஆன்ம பரிசோதனைக்காக
அமர்ந்த தியானத்தில்
என் முதுகைக் குத்திற்று
உன்கண்

யுரேகா சொல்லித்
தட்டுத் தடுமாறி
ஓடிய போது
கைகொட்டிக் கைகொட்டிச்
சிரித்தாய்

யார் நீ

வியர்த்தம்

வெளியேற வழிதேடி
அலைவதிலும்
விளையுமொரு
வட்டம்

நம் முயற்சிகளின்
உள் ஆவி
கெஞ்சிக் கூடவே வந்து
வியர்த்த விளிம்புவரை
புலம்பிப் பார்த்து
முணுமுணுத்துப்
பிந்தங்கிப்
புள்ளியாய் மறையும்.

உளவாளிகள்

என் பிம்பங்களை
முறித்துக் குவித்துத்
தீமூட்டினாய்

மார்கழி கழிந்தது

பார்த்துக்கொண்டேயிரு

நானும் ஒருநாள்
என்னைத் திரட்டி
நின்று கொள்வேன்

ஈரவிரலை உரசி
ஈமத்தீ எழுப்புவேன்

சுற்றிலும்
முள்வேலி சலசலத்து நகர்ந்துவர
நானும்
முகம் இருட்டி
நடமாடுவேன்

என்
ஒரு பகுதிக்குக்
குரல்மாற்றம் தந்து
உன்னுடையதெனக்
கூவித்திரிவேன்

இன்னொருநாள்
என்னிடமிருந்தும்
தப்பி
உச்சியிலிருந்துகொண்டு
பார்ப்பேன்

இயக்கம் விலகி
நிமிஷங்கள் மட்டும் மொய்த்துக்
கிடக்கும் என் உருவங்களை
மிதித்தும்
தழுவியும்
கடித்தும்
முத்தமிட்டும்
நீ தேடித்திரிவதை
வேவு பார்ப்பேன்

வினை

விதைத்த வினை
விளைந்தது

விளைந்தவை உதிர்ந்து
மீண்டும் பெருகின
மீண்டும் பெருகின
மீண்டும். . .

வினை அறுப்போர்
எவருமில்லை
எங்கும் எங்கும் வினைமயம்

உலகெங்கும் நிறைத்தன
யுகங்களில் நிரம்பி வழிந்தன
அண்டம், தன்
தையல் பிரிந்து
அவதியுற்றது

இந்தப் பிரளயத்தில்
மிதந்தவர்களைப் பற்றி ஒரு
நிச்சயம் பிறந்தது

மூழ்கிக்
காணாமல் போனவர்கள்
கண்டுபிடிப்பார்கள்
என்றும்
வதந்தி பிறந்தது... ..

நிசப்தமும் மௌனமும்

நெடுங்கால நிசப்தம்
படீரென வெடித்துச் சிதறியது

கிளைகளில் உறங்கிய
புழுத்தின்னிப் பறவைகள்
அலறியடித்து
அகாத வெளிகளில்
பறந்தோடின
தத்தம் வறட்டு வார்த்தைகளை
அலகுகளால் கிழித்துக் கொண்டே
0

விடிவு
நினைவுகளையும்
நிறமழித்தது

'நெடுங்காலம்' கடுகாகிக்
காணாமல் போயிற்று

சுருதியின்
பரந்து விரிந்து விரவி...
இல்லாதிருக்கும் இருப்பு
புலப்பட்டது
மங்கலாக

சுருதி தோய்ந்து
வானும் நிறமற்று
ஆழ்ந்தது மெத்தென

பூமியில்
ஒலிகளின் உட்பரிவு
பால்பிடித்திருந்தது
வெண்பச்சையாய்

அந்தர நடை

வழியனுப்ப நீ
வந்தாலும்
வாசல் இருட்டில்
உன்முகம் தெரிவதில்லை

உன்
நிழல்குரலும்
வெறும் அசைவன்றி
வேறொன்றும் உணர்த்துவதில்லை

உன்
சூழல் அணுக்களோ
உருக்காட்டுமுன்
உருமாறும்
ஓயாமாறிகள்

பிரபஞ்சத் தூசிகளை
மூச்சிடை உள்ளிழுத்து
வெளியை
ஒரு சிரிப்பில் சுருட்டி விரிந்த
சூன்யத்தில்
நீ நான் நம்மிடை
விறைத்தோடிய மெல்லிய கோடு.

கணத்தின் சிறுதுகள்.

பிரமிப்பில்
பிரமிக்கவும் மறந்து
உன்னுடன் கைகோத்து
இடைக்கோட்டில்
அந்தர நடை பயின்றது

உண்மைதான்

எனினும்
நம்பச் செய்வது --
இல்லை --
நம்புவது எப்படி

Sunday, November 11, 2007

மாலை - ஊர்

வேட்டைக்குப் போனவர்கள்
திரும்பி வருகிறார்கள்

மான் முயல்கள் வேறேதோ பிராணிகளைச் சுமந்து --
விசுவாச வாலசைப்புகள் பின்தொடர,
தாரை தப்பட்டை முழங்க,
பந்தங்களின் வெளிச்சத்தில்
எவர் வெற்றியிலோ எவரெவர் சோர்வுகளோ
மழுங்கித் தெரிய.

0000

மாலை நேரம் சுறுசுறுப்படைகிறது
இருந்த இடத்திலேயே.
முடிவின்மையின் சேமிப்புக்கு
ஒரு புள்ளியைப் பிரித்துக் கொடுக்கிறது

0000

சிறுவர்கள் என்ற எங்களின்
விளையாட்டினுள் நுழைந்து
வியர்வையைச் சீண்டிய
விநோதக் கனவு மயம் .. .. ..

0000

இருள் பூசப்பூச
மரங்களும் கூரைகளும் குட்டிச்சுவர்களும்
முகங்களும் அவற்றின் உரையாடல்களும்
கனத்து
யுகாந்தரங்களின் ரகசியம் அழுந்தி
மயங்குகின்றன

ஊர் மேடிட்டுக் கொள்கிறது
யாதும் ஊர் ஆகிறது

பகல்வேனிலின் சீற்றம்
அலறிப் புடைத்த ஆவேசம்
மூலைகளை மோதி அசைத்த காற்று
யாவும் ஊர் ஆகின்றன

பொழுதின் நினைவும்
நினைவின் பொழுதும்
இடைச்சுவர் தகர்ந்து
ஒன்றினுள் ஒன்றாகி
ஊர் ஆகின்றன

பேசுவதற்கு என்ன இனி
தணிந்தடங்கிய யாவும் இதோ
ஊர் ஆகின்றன

உலக உருண்டை உருவிலகி
ஊர் ஆகிறது

ஊர்
தன் மிகச்சிறிய புள்ளியில்

In Progress ...

In Progress ...

எதன் முடிவிலும் . . .

நினைக்க நினைக்க
நா ஊறிற்று
பறிக்கப் போகையில்

ஓ, அதற்கே எவ்வளவு முயற்சி!
இரண்டு சிறகுகள்
இங்கே கொண்டுவந்துவிட,
யார்யாரோ கொடுத்த
கண்களைக்கொண்டு வழிதேடி,
இடையிடையே காணாமல்போய்,
என்னைநானே
கண்டுபிடித்துக் கொண்டு
கடைசியில்
மங்கலான ஒருவழியில்
நடந்தோ நீந்தியோ சென்று சேர்ந்து
முண்டுமுண்டாய்ச்
சுளுக்கிக்கொண்டு நிற்கும்
அந்த மரத்தில் என்னை ஏற்றி
அதை பறிக்கச் செய்து

ஏறிய நானும்
கீழ்நின்ற நானும்
நாவில் வைத்தபோது
குடலைக் கசக்கும் கசப்பு

கீழே எறிந்துவிட்டு
மறுபடி நினைத்தால்
நினைக்க நினைக்க
நா ஊறுகிறது.

ஏற்பாடு

நமக்குள்
ஒரு ஏற்பாடு

நான் நிகழ்கிறவன் இல்லை
என்பதால்
நிழலும் சுவடுமற்று
நின்றிருப்பேன்

நீ அபரிமித இயக்கத்தில்
கடையப்பட்டு
வேகத்தின் பூரணம் நிச்சலனம்
எனக் கண்டு
அதேபோல் நின்றிருப்பாய்

பாவனைகளில்
மிகமூத்த
நான் என்ற பாவனையை
மெல்ல முகர்ந்து
விரல் நுனியால்
தொட்டுப் பார்த்துக் கொண்டு
நான்

நான் என்ற பாவனைக்குள்
செறிவாய் நுழைந்து திணிந்து
பார்த்தலும் பார்க்கப் படுதலும் இல்லாமல்
நீ

என்னைத் தனக்கென்று கொள்ள
என்னிடம் எதுவும் பிறக்காமல்
பார்த்துக் கொண்டு
நான்

உன்னை உறிஞ்சிக் கொண்டு
உன்னிடம் சரணடைந்த
வெளியை
வெறித்துக்கொண்டு
நீ

நமக்குள்
இது ஒரு
ஏற்பாடு



உலா

நிழல்
தொட்டு எழுப்பிவிட்டுப்
போனது

ஒருநாளும்
படுக்கையில்
பின்னம் விடாமல்
வாரிச்சுருட்டி
முழுமையாய் எழுந்ததில்லை.
இன்றும் தான்.

வாடைக்காற்று
வழித்துப்போகும்
தேய்மானம்
பொருட்படுத்தாமல்
நடைபாதை நெருப்பு
தொற்றித் தொடர
ஊர்க்கோடி வரை
உலாவப் போகவேண்டும்

ஊர்க்கோடி
ஒருநாள் இருந்த இடத்தில்
இன்னொருநாள்
இருப்பதில்லை

போய்ச்சேரும்போது
பெரும்பாலும்
இருட்டிவிடும்

இருளின் பேச்சுமட்டும்
மயக்கமாய்
கனத்துக் கேட்கும்
அதில் மின்மினிகளின்
பாதையன்றி
வேறொன்றும் தெரியாது

திரும்பிப் பார்த்தால்
ஊர்
புகைவிட்டுக் கொண்டு
சின்னதாய்த் தெரியும்

என்
பிணங்கள் அங்கே
பொறுமையிழந்து
கூக்குரலிடுவது கேட்கும்...

திரும்பத்தான் வேண்டும்
மனசில்லாவிடினும்

திரும்பி,
கடைவாயில்
மரணம் அதுக்கி
மழுப்பிச் சிரித்து
உறங்கித் திரிய வேண்டும்
மறுபடி நிழல்வந்து
தொட்டு எழுப்பும் வரை