Tuesday, September 3, 2013

நான் இல்லாமல் என் வாழ்க்கை

நான் இல்லாமலே
என் வாழ்க்கை
எதேச்சையில்
அருத்திரண்டது

வடிவ விளிம்புகளைக்
கற்பிக்க
நான் இல்லாததால்
நீல வியாபகம் கொண்டது
எதைத் துறந்தோம் என்று
அறிய வேண்டாத
நிம்மதியில் திளைத்தது

உணர்வுகளின்
பொது ரீங்காரம் மட்டும்
தொடர
நிழல் வீழ்த்தாமல்
நடமாடியது
கூரைகளுக்கு மேலே
தன்மைகளின் எதிர்ப்பை
அலட்சியம் செய்து
அசைவு தெரியாமல்
பறந்து திரிந்தது
பூமியை துளைத்து
மறுபுறம் வெளிவந்தது

பிம்பங்களின் துரத்தலுக்கு
அகப்படாமல்
நுட்பம் எதுவுமற்ற
சூன்யத்தை அளைந்தது

மரணப் பாறையிலிருந்து
குதித்து விளையாடியது
காலத்தின் சர்வாதிகாரம்
புகைந்து அடங்குவதை
வேடிக்கை பார்த்தது
தத்துவச் சுமை கரைந்து
தொலைதூரத்து வாசனையாய்
மிஞ்சிற்று
எனது குறியீடுகளின்
குறுக்கீடு
இல்லாது போகவே
தன்னைத் தனக்குக்
காட்டிக் கொண்டிருப்பதையும்
கைவிட்டது.

Saturday, February 9, 2008

பொதுப் பார்வை

பிரயாணங்களின் ஊடே
தயங்கித் தயங்கி ஒட்டிக்கொண்டது

என்னைப் பார்க்கத் தெரிந்துகொண்டிருந்தது

எனது உடைமைகளைக்
கணக்கிட்டு வைத்திருந்தது

என்கால் தரையில் ஊன்றும்போது
தெம்பு கொண்டது

விளையாட்டுப் போட்டிகளுக்கு
என்னை அழைத்துச் சென்றது;
நூலகங்களுக்கும்

என் ரத்த அழுத்தம்
சமன்பட்டிருப்பதை
சோதித்தறிந்து
அமைதிகொண்டது

என் கவனிப்பு வட்டத்திற்குள்
நிரந்தரமாக வந்துகொண்டேயிருந்தது

விவாதங்களில்
எதிர்ப்பட்டோரை
வெற்றிகொண்டு புளகித்து
என்னைக் கடைக்கணித்தது

எனது தனிப்பார்வைகளை
நான் ஒளித்துவைத்திருக்கும்
இடங்கள் தேடி
ரகசியம் செய்தது

அப்படி எதுவும் இல்லை
என்ற
என் உண்மையைச்
சந்தேகித்தது

பொதுப்பார்வை

Wednesday, February 6, 2008

இந்த அறையில்

என்றென்றும் இல்லை இனி
அலுத்த சுவடுகள்;
அவற்றின்
கறுத்து வெடித்த காலபூமி

முதலில் மிரண்டு
பின் சமனப்படும் வண்ணம்
நுழைவோர் கண்களில் வெறிக்கும்
சுத்தமான வெற்றிடமே இனி

நான் இருப்பதாக
நினைத்துக்கொண்டிருப்பவர்களோடு
இந்த அறையில்
ஏதேனும் பேச்சு நிகழலாம்
தொட்டால்
நாடித்துடிப்பு தெரியாத
பேச்சு

சாட்சிகள் இல்லாத நிகழ்வுகள்
திணிந்து கிடக்கலாம்
வெற்றிடம் சேதப்படாமல்

இந்த அறையில்
வினாக்கள் விளக்கங்கள்
முற்றிலும் அற்ற
தூய்மை நிகழலாம்

வெளிச்சப் பூச்சற்ற  ஒளியின்
இருப்பில்
என் இளவயது பிம்பம் மட்டுமே அறியும்
கோடிக்கணக்கான வடிவுகள்
குவிந்துகொண்டே இருக்கலாம்
வெற்றிடம் சேதப்படாமல்
இந்த அறையில்

பிரிதல் - பிரிவுறுதல்

விரல்களிலிருந்து
இறங்கி வெளியேறி
அந்தப் பாதை
போய்க்கொண்டிருந்தது

அதன் கபடற்ற விறைப்பில் தெரிந்தது
அதனிடம் மர்மம் எதுவும்
இல்லை என்பது

வயல்வெளிகள் தாண்டி
தென்னந்தோப்புகள் தாண்டி
சுனை நிரம்பி வழியும்
ஓடைகளில் இறங்கி ஏறிப்
போனது

அதன் தயக்கமின்மையில் தெரிந்தது
அதனிடம் அர்த்தம் எதுவும்
இல்லை என்பது

மலைமீது பாதிதூரம் ஏறும்வரை
தெரிந்தது பிறகு
காடுகள் சூழ்ந்து
மறைத்துவிட்டன

அதன் மறைவில் தெரிந்தது
பிரிந்து சேர்ந்து பிரியும்
யுகங்களின்
இருள் அரசாட்சி

விரல்கள் இப்போது
தவிக்கின்றன
வெளியுகத் தொடர்பு
துண்டிக்கப்பட்டு

விரல்கள் இப்போது
களிகொள்கின்றன
வெளியுகத் தொடர்பு
துண்டிக்கப்பட்டு

தெரிந்துகொள்வது

நண்பர்கள் பகைவர்கள்
உற்றார் உறவினர் ஊரார்
என்னை முடிவு செய்தார்கள்

கல்லும் கானலும் ஒளிவேகங்களும்
உலகின் அனைத்து அசைவுகளும்
என்னை முடிவு செய்தன

இதுவே உண்மை
என நினைத்தேன்

விசித்திரங்களால் பின்னிய அங்கி அணிந்த,
சொல் செயல் விலகிய
பேருருவங்களோடு  புழங்கினேன்
அவை என்னை
உருவு செய்திருக்கலாம்
என்று நினைத்தேன்

நான் உரு ஆகக் காத்திருந்தது
மேலே சொன்ன
யாருக்கும் எதற்கும் தெரியாது

காத்திருந்த போதிருந்த
எனது உருவமே
இந்த எல்லாவற்றையும்
முடிவு செய்திருக்கலாம்
என்று நினைத்துக்கொண்டேன்

நினைவின் அஸ்திவாரம்
என்னுடையதல்லாத அடர் இருள்
என்று கண்டிருந்ததால்
அதற்கும் ஏதாவது பங்கிருக்கும்
என்று நினைத்தேன்

என்னுடையதல்லாதவற்றின்
எந்தத் துகள்கள்
என்னுடையவற்றின் துகள்களுடன்
கலந்தன என்று தெரியவரும்போது
என் உரு வரலாறு
சற்றுத் தெளிவாகலாம்

என்னுடையவை என்பவை
என் உருவை எதிர்நோக்கி 
எனக்கு முன்னரே இருந்ததால்,

அப்போது அவை யாருடையவை
என்று தெரியவரும் போது
நான் உரு ஆகினேனா
என்று தெரிந்து கொள்வேன்