Thursday, January 17, 2008

இதயத்தை ஒரு தூரிகையாய்ச் செய்து

உலகின் விஷங்களை வெல்லவோ
உன்முகத்தில் இரண்டு மகுடிகள்?

உனது பார்வை
உன் கண்களுக்குச்
சுவாசமாயிருப்பது போலும்

ஆசையோடு
நெஞ்சு முழுவதையும் விரித்து
உன் பார்வைகளை
அள்ளியபோது
நான் வானமாயிருந்து
நட்சத்ரங்களை அள்ளிக்
கட்டிக் கொண்டதாய்
உணர்ந்தேன்.

பூவின் விரகத்தை
நாசி உணர்வதென
உன்பார்வைகள் என்னிடம்
உணர்ந்த துண்டோ?

என்னுள் நிறைந்து குவியும்
சூனியச் சுருள்களை
விரித்து விரித்து, அவை
என்ன எழுதுகின்றன?

உன் விழியிலிருந்து
அத்தனைக் கதிர்களும்
அத்தனைப் பூவிரலாய்
என் நரம்புகளில்
எந்த ராகங்கள் தேடி
அலைகின்றன?

இவ்வளவு மின்னல்களும்
மேய்ந்துதானோ,
என் வானம்
இவ்வளவு சுத்தமாயிருக்கிறது?

என்னுள்
புதுப்புது விடியல்முளைகளை
எழுப்பும்
பூவாளித் தூவல்களைப்
பார்வைகள் என்றா
சொல்வேன் தோழி?

உன் பார்வையின் ஸ்பரிசத்தால்
என்னுள் அலைகள் உறைந்து
அந்த நிச்சலனத்திலன்றோ
என் ஆன்மாவின் சுருதியை
முதன்முதல் கேட்டேன்

நீ.. பார்க்கவில்லை
சரிபார்க்கிறாய்

மூடிய மொக்கின் ரகசியமாய்
உன்
ஆரம்பகாலக் கனவுகளில்
படிகமிட்டதோர்
காதல்மிக்க சாயையுடன்
என்னை ஒப்பிட்டு --

நீ பார்க்கவில்லை
சரிபார்க்கிறாய்

எப்பொழுதேனும்,
உன்கடைவிழிக்கரையில்
உன் ஆழங்களின் ரகசியம்
கடற்கன்னிபோல்
வரும்; கண்ணயரும்

எப்பொழுதுமே, நான்
பொழுதுகள் தேங்கும் உன்
முற்றத்தில்
பெருமூச்சுக்கள் துடுப்பிடும்
தோணியாய் உலவுவேன்

உன் விழிகளினமுதம்
என்னுள்ளிறங்கி
என்னைப் புதுப்பித்திருக்கும்
இவ்வேளையில்
நான் புரிந்துகொள்கிறேன்;

'இந்த வினாடிகளின் ஏக்கத்துக்காகவே
இத்தனை வருஷங்களைத்
தாண்டி வந்தேன்'

'இந்தப் புதிர்கள்முன் பிரமிக்கவே
இத்தனை அறிவிலும்
புகுந்து வந்தேன்'

'இவற்றின் சாயல்களைச்
சித்திரிக்கவே
இத்தனைக் காலம்
இதயத்தை ஒரு தூரிகையாய்ச்
செய்து கொண்டிருந்தேன்'

No comments: