Thursday, January 17, 2008

என் சொந்தச் சோதனைச் சாலைக்கு

நான் போகிறேன்
காலவெள்ளத்திலிருந்து பிரிந்து
ஒரு மலட்டு பூமியில் தேங்கி வற்றிய
இந்தக் குட்டையை விட்டு
நான் போகிறேன்

பொய்களின் போதையில் புரளும்
வஞ்சகத்தின் வாயிலிருந்து
வெளியேறி
நான் போகிறேன்

அர்த்தம் வறண்ட
சொற்களிடையே
சாவின் மூச்சுப்பட்டதும்
நொறுங்கும் குமிழிகளிடையே
ரத்த வாசனையுள்ள
அழகிய பூக்களிடையே
உப்பு ஊற்றுக்கள் பெருகும்
இருளின் தியான மண்டபங்களிடையே
அலைந்து திரிவதைவிட்டு
நான் போகிறேன்


வாழ்வின் மடியிலிருந்து
சருகுகளாய் உதிர்வதினும்
மரணத்தின் மடியிலிருந்து
விதைகளாய்ச் சிந்தலாமே!

என் உறுதிகளை
இவர்களிடமிருந்து காப்பாற்றுவதற்காக
நான் பிடித்த
என் பிடியின் நெருக்கத்தாலேயே
அவைகள் கசங்கிப்போனபின்,

வரலாற்றுக் கூட்டில்
சோகத்தைச் சேகரிக்கும்
வண்டுகள் வருமுன்
இந்தப் பூவிலிருந்து
ஆவியாகிப் போகிறேன்

கணக்கில்லாமல் கிளைத்துவிட்ட
விரக்தியின் சிம்புகளில்
என் தினவுகளைத் தீர்க்க
இன்னும் எத்தனை நாள்
உராய்ந்து கொண்டிருப்பேன்


ஏதோ ஒரு விடையை
எப்போதோ என்னுள் வாங்கியதால்
எத்தனையோ வினாக்களுக்குத்
தாயானேன்
அந்த விடையின் மூலத்தைத்
தேடிக்கொண்டு போகிறேன்

என் எழுத்துக்களின்
கூரிய நுனிகளில்
தட்டுப்படாமல்,
எனக்கே தெரியாமல்,
என் பாடல்களின் உயிராய் இழையோடும்
அபூர்வமானதோர் ஏக்கத்தைத்
தேடிக்கொண்டு
நான் போகிறேன்

தடங்கள் பிடிபடாமல்
தகிக்கும் கவர்ச்சியோடு
எனக்கு முன்னால் நடந்து போகும்
ஒரு
மயக்கம் ததும்பும் சுருதியைப்
பிடிப்பதற்காக,
கனவைப் பிடிக்கக் கை நீட்டும்
குழந்தையின் திகைப்போடு
போகிறேன்

யுகமுகடுகளுக்கே சென்று
அங்கிருந்து
நிமிஷ நுரைகளோடு
நேரங்கள் சரிவதைப்
பார்த்துக்கொண்டிருப்பேன்

மௌனத்தின் பூமியைப்
பெருமூச்சுகளால் கீறி
துக்க விதைகளை இட்டு
உயிர் நிரம்பிய தாகங்களை ஊற்றிக்
கவிதைகளை வளர்ப்பேன்

பகல் இரவுகள்
தங்கள் வேஷங்களைக் களைந்துவிட்டு
உறங்கிக்கொண்டிருக்கும் இடத்தில்
நிழல்களின் நிழல்களை

-- மனித நெஞ்சினுள்
சந்தைகூடி நெரியும்
அந்த நிழல்களை --
நினைத்துக் கொண்டிருப்பேன்

என் இதயத்திற்குள்
சீற்றத்தோடு எரிகின்ற நெருப்பை
அணைத்துவிட்டுச்
சிந்தனையோடு எரிகின்ற
சுடர்களை ஏற்றிவைப்பேன்

அங்கே -- அந்த இதயத்தில்
ஊமைகளின் தர்க்கமேடையை
ஒரு ஞானமின்னலால்
நொறுக்கிவிட்டு
அந்த இடத்தில்
கனவுகளின் சொர்க்கத்தை அமைப்பேன்

அங்கே
வானத்துப் பூக்களுக்காகக்
கை நீட்டும் குழந்தைகளை
இந்த மண்ணின் முனகலைத்
தாலாட்டாக்கி
உறங்கவைப்பேன்

அதற்காகவே
கடவுளின் சோதனைச் சாலையைவிட்டு
என் சொந்தச் சோதனைச்சாலைக்கு
நான் போகிறேன்

No comments: