Thursday, January 17, 2008

நீலாம்பரி

பகல்வெளியில் எங்கோ
பறந்து போயிருந்த உறக்கம்
இதோ
படபடத்து
விழிக்கூட்டிற்குத் திரும்புகிறது

இமை ஊஞ்சலில் சற்றே
இளைப்பாற ஆடிவிட்டு,
மௌனத்தின் மிருதுவின்மேல்
சிறகு பரப்பி,
என்னுள்ளிருக்கும் தன் குஞ்சுகளுக்கு
என் இதய அடியறைச் சேமிப்பை
எடுத்தூட்டி,
தன் உலகை
எனக்குள் விரிக்கவென
விழிக்கூட்டிற்குத் திரும்புகிறது ..

நானும்,
வடிவமற்ற கிண்ணத்தில்
வந்த மதுவை உறிஞ்சியவனாய்,
சலனங்கள் அற்ற --
என் வேறுபகுதியை நோக்கி
என் சுமைகளின்மேல்
நடந்து போகிறேன்

மரண மயக்கம்
சுழித்துச் சுழித்து
உறக்கமாய் நுரைக்கையில்
அந்த நுரைகளிடையே

ஏதோ புதுப்புதுச் சாயைகள்
வண்ணம் கொள்ளும்
வனப்பைப் பார்க்க
மிதந்து போகிறேன்

உள் உலகின் வானத்தில்
சரிகைத் தூற்றலில் நனைந்துகொண்டே
என்னைத்தானோ,
அன்றி வேறு எதையோ தேடிப்
பறந்து போகிறேன்

அடிநினைவு ரேகைகள்
தடந்தெரியாது ஓடும் இடங்களில் ...
சோகத்தின் வீறல்கள்
உறைந்த மின்னலாய்க் கிடக்கும் இடங்களில் ..
கண்ணீரின் ரகசியங்கள் கருவாகும் இடங்களில்

நான் உலாவப் புறப்படுகிறென்

மூலமுத்திரையற்ற
அனாதைக் கனவுகளின்
ஆவேச அரவணைப்பில் --
உறக்கத்தின் பட்டுவிரல் மீட்டலுக்கு
நானே வீணையாகிடும் மயக்கத்தில் --

இருளின் திகைப்புகள்
அடர்ந்துவிட்ட
இரவின் மந்திர முணுமுணுப்பில் --

என்னைநான் இழந்துவிடப் போகிறேன் ...

இதோ --
உறக்கம் விழிக்கூட்டிற்குத் திரும்புகிறது

No comments: