Wednesday, February 6, 2008

ராகம்

விரல்கள் தாளமிடத் தொடங்கியதும்
அந்த ராகம்
எங்கிருந்தோ
மனசுக்குள்
நுழைந்தது

கிளை பிரிந்து பிரிந்து
கடலடித் தாவரங்களை
அசைத்து இசைகொண்டது

பவளப்பாறை இடுக்குகளில்
குளிர்ந்து கிடந்த வயலின்கள்
உயிர்த்து வீறிட்டன
00

எல்லாப் புறங்களிலிருந்தும்
ஒரே காற்று
வீசியடித்தது

கற்பனைகள் முற்றிலும்
கலைந்து போயின

பல தேசத்துக்
குழந்தைகளின் முகங்கள்
ஒரே அழுகையின் கீழ்
ஒன்று கூடின

பாதைகளற்றுப் போனது உலகம்
நேரம் கூட நகர்வதற் கின்றி

கவிதையின் மூச்சு ஒன்று
கவிதையை மறுத்துக்
கடல்வெளி முழுவதையும்
கரைக்கத் தொடங்கிற்று

No comments: