Wednesday, February 6, 2008

தேடல்

எதைத் தேடினேன்?

000

கைவிடப்படும்போதெல்லாம்
நுரையீரல்களில்
குளிர் ததும்புகிறது

கடைசி வார்த்தைகளின்
சில துகள்கள் மட்டுமே
எழும்பித் திரிகின்றன

பின்வாங்கிப் போன உக்கிரம்
உற்றுப் பார்த்தால் மட்டுமே தெரிகிற
சிறிய குழிகளை
விட்டுப் போயிருக்கிறது
000

தீர்மானித்துக்கொண்டும்
தலைப்பிட்டுக்கொண்டும்
ஆடம்பர அலைச்சல்
எதை அலைந்தேன்?

நாள் மாதம் வருஷம் எல்லாம்
அகன்று பரவத் தெரியாதவையாய்க்
கோடுபாய்ந்து போகின்றன

எங்கிருந்து எனத்தோன்றாது
மேலே கவியும் உரத்த அடர்த்தி
பிரக்ஞையின் வேரில்
பேசிக்கொண்டே நழுவி இறங்குகிறது

சுற்றிலும் திகைப்புகள்
இயல்பே என
ஒடுங்குகின்றன
000

திசைப்பாய்ச்சல் அற்று
இயக்கம் தன் உச்சியில்
உறைவு காண்கிறது

உள் நுழைய அறியாமல்
முதலும் முடிவும் மூச்சொன்றிக்
கூம்பிச் சேர்ந்த அம்பு நுனியில்
தேம்பி அடங்குகிறது
தேடல்

No comments: