Wednesday, February 6, 2008

பேச்சு

பேச்சாளரின்
கவனம் முழுவதும்
தன் லயிப்பின்
நடுப்புள்ளியில்

புள்ளியின்
அனந்தகோடி அணுக்களுள்
திசையற்று இருந்தார்

அனந்த கானகத்தினுள்
நிசப்தமாக வீசி மோதும்
புயல்களென இருந்தது
அவர் பேச்சு

பேச்சின் விஷயம் தொகுத்தெடுக்க
வெளிச்சமாய் முகம்காட்டி
இருந்த
முன்வரிசை
முதலில் எழுந்து போனது

யாரின் யார் இவர்
என்று துருவ இருந்த
அடுத்த வரிசை
வினாக்களைத் தட்டி உதிர்த்து
எழுந்து நடந்தது அடுத்தாற்போல்

மூலங்களை
பாவனை கண்டு
விழிகளில் உறைந்த
பரவச கனத்துடன் காத்திருந்த
தனித்தனி நபர்கள்
வேறுவேறு
மூலைகளிலிருந்து
புறப்பட்டுப் போயினர்

பேச்சென்று காணாமல்,
இருப்பதுபோல் தோன்றிய
நான்குபேர் மட்டும்
இருந்தனர்
அறியாமையின் பேரன்பு கமழ

No comments: